This Article is From Sep 18, 2019

Maharashtra Polls: பாஜகவுடன் தொகுதி பங்கீட்டில் மோதல்! - தனித்து போட்டியிடுகிறதா சிவசேனா?

மஹாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளில், சிவசேனாவுக்கு 120 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்கப்படாது என்பதில் பாஜக திட்டவட்டமாக உள்ளது.

Maharashtra Polls: பாஜகவுடன் தொகுதி பங்கீட்டில் மோதல்! - தனித்து போட்டியிடுகிறதா சிவசேனா?

Polls in Maharashtra: கூட்டணியை முறிக்க ஆர்வம் காட்டவில்லை என்றாலும், தனித்து போட்டியிடும் முடிவுக்கு சிவசேனா தயாராகி வருகிறது.

Mumbai:

மஹாராஷ்டிராவில், காங்கிரஸ் மற்றும் ஷரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிட்டத்தட்ட 30 தலைவர்கள் தங்களது அணிகளில் சேர்ந்துள்ளதால், ஆளும் பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன.  

இதனால், நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜகவும் - சிவசேனாவும், ஒரே கூட்டணியாக போட்டியிடுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, எனினும் இரு கட்சிகளும் அவ்வாறு போட்டியிடும் பட்சத்தில், புதிதாக இணைந்த இந்த தலைவர்களுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது என்பது ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கும்.

எனினும், இதுகுறித்து என்டிடிவிக்கு கிடைத்த தகவலின் படி, மஹாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளில், சிவசேனாவுக்கு 120 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்கப்படாது என்பதில் பாஜக திட்டவட்டமாக உள்ளது. மேலும், தனிப்பெரும்பான்மையுடன் அங்கு வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையில் பாஜக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே, பாஜகவுடனான கூட்டணியை முறிக்க ஆர்வம் காட்டவில்லை என்றாலும், சிவசேனா தனித்து போட்டியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உத்தவ் தாக்கரே கூறும்போது, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இந்த கூட்டணி தொடர வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளார் என்றும், எனினும் மாநில பாஜக தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 50-50 தொகுதி பங்கீடுக்கு சிவசேனா வலியுறுத்தி வருவதாகவும் தெரிகிறது. 

தொகுதி பங்கீடு குறித்து தாக்கரேவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, எங்களுக்கிடையில் எல்லாம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. சிவசேனா வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடக்கூடிய இடங்களின் பட்டியலை முதலமைச்சர் தயாரிக்கும் வரை நான் காத்திருப்பேன். பின்னர் அந்த பட்டியலை கட்சியினரிடம் முன்வைத்து கலந்தாலோசித்து, நாங்கள் முடிவு செய்வோம்" என்று அவர் கூறியுள்ளார். 

இதனிடேயே, பாஜகவுடன் கூட்டணி வைத்து முதலில் 144 தொகுதிகளில் போட்டியிட சிவசேனா விரும்பியது. ஆனால் சரிசமமான தொகுதிகளை ஒதுக்க தயக்கம் காட்டிய பாஜக 106 தொகுதிகளை மட்டுமே சிவசேனாவுக்கு ஒதுக்க ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தொகுதிப் பங்கீட்டில் இதுவரை உடன்பாடு எட்டப்படாததால், கூட்டணியில்லாமல் தனித்து போட்டியிடவும் தயாராக இருக்குமாறு கட்சியினருக்கு சிவசேனா தலைவர் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

கடந்த 2014ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 122 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்த நிலையில், சிவசேனா 63 இடங்களிலும், காங்கிரஸ் 42 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
 

.