“சுய மதிப்பீட்டுக்கான நேரம் இது…”- Congress-ல் அடுத்தடுத்து எழும் கலகக் குரல்கள்!

தேர்தல் முடிந்த உடனேயே, தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் Rahul Gandhi.

“சுய மதிப்பீட்டுக்கான நேரம் இது…”- Congress-ல் அடுத்தடுத்து எழும் கலகக் குரல்கள்!

Rahul Gandhi, 2019 தேர்தலுக்கு மிகவும் அதிரடியாக பிரசாரம் செய்தபோதும், அக்கட்சியால் வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது

ஹைலைட்ஸ்

  • Jyotiraditya Scindia-விடம், Salman Khurshid-ன் கூற்று பற்றி கேட்கப்பட்டது
  • காங்கிரஸ் சுய மதிப்பீடு செய்ய வேண்டும் - சிண்டியா
  • சிண்டியா, பாஜக-வுக்குத் தாவ வாய்ப்புள்ளதையும் காங்கிரஸ் மறுக்கிறது
New Delhi:

காங்கிரஸ் (Congress) கட்சியின் தலைவர், தனது பொறுப்பில் இருந்து விலகியதுதான் கட்சி தடுமாறிக் கொண்டிருப்பதற்கான காரணம் என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகி சல்மான் குர்ஷித் (Salman Khurshid) தெரிவித்திருந்த நிலையில், இன்னொரு முக்கிய புள்ளியான ஜோதிராதித்ய சிண்டியா (Jyotiraditya Scindia), “காங்கிரஸ், தன்னை சுய மதிப்பீடு செய்து கொள்வதற்கான நேரம் இது” என்று எச்சரித்துள்ளார். 

குர்ஷித் சொன்ன கருத்து குறித்து சிண்டியாவிடம் கேட்டபோது, “மற்றவர்கள் கூறிய கருத்துக்கு நான் விளக்கம் அளிக்கப் போவதில்லை. ஆனால், காங்கிரஸ் தன்னை சுய மதிப்பீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்பது உண்மை. கட்சியின் நிலை குறித்து அலசி ஆராயப்பட வேண்டும்” என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். 

ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவராக பார்க்கப்படும் சிண்டியா, மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று கருதி வருகிறார். இதுவரை அவருக்கு அந்தப் பொறுப்பை காங்கிரஸ் கொடுக்கவில்லை. 

மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவராக சிண்டியா நியமிக்கப்படவில்லை என்றால், அவர் கட்சியிலிருந்து விலகி, பாரதிய ஜனதாவில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக ஜம்மூ காஷ்மீர் விவகாரத்தில் மோடி தலைமையிலான பாஜக எடுத்த நடவடிக்கைக்குப் பாராட்டுத் தெரிவித்திருந்தார் சிண்டியா. இது அவர் கட்சித் தாவும் சந்தேகத்தை மேலும் அதிகரித்தது. 

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவுக்கு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், ராகுல் காந்தி, திடீரென்று வெளிநாடு சென்றுள்ளது, குர்ஷித் மற்றும் சிண்டியாவை இப்படிப் பேச வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ராகுல், கம்போடியாவில் இருப்பதாகவும் நமக்குத் தகவல் வந்துள்ளது. 

முன்னதாக குர்ஷித், “எதனால் வீழ்த்தப்பட்டோம் என்பது குறித்து நாங்கள் சரியாக விவாதிக்கவே இல்லை. எங்களின் மிகப் பெரிய பிரச்னை எங்கள் தலைவர், விலகிவிட்டதுதான்…” என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தி, 2019 தேர்தலுக்கு மிகவும் அதிரடியாக பிரசாரம் செய்தபோதும், அக்கட்சியால் வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. அதே நேரத்தில் பாஜக 303 இடங்களைப் பிடித்தது. 

தேர்தல் முடிந்த உடனேயே, தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் ராகுல். 2017 ஆம் ஆண்டுதான் அவர் தலைவர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிறகுதான் 19 ஆண்டுகளாக கட்சியின் தலைவராக இருந்த சோனியா காந்தி, மீண்டும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 

நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, கர்நாடகாவில் கூட்டணி அரசு ஆட்சியை இழந்த காங்கிரஸ், அடுத்ததாக மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் தேர்தலை சந்திக்க உள்ளது. தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களில் இருக்கும் காங்கிரஸின் மூத்த நிர்வாகிகள் கட்சிக்கு எதிராக வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர், பாஜக-வுக்குத் தாவியுள்ளனர்.