This Article is From Feb 23, 2019

எதிரிகளை ஓட ஓட விரட்டி அடிக்கும் தேர்தலாக மக்களவை தேர்தல் அமைய வேண்டும் - எடப்பாடி பேச்சு

மக்களவை தேர்தலில் அதிமுக – பாமக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. தேமுதிக இழுபறியில் இருக்கிறது.

எதிரிகளை ஓட ஓட விரட்டி அடிக்கும் தேர்தலாக மக்களவை தேர்தல் அமைய வேண்டும் - எடப்பாடி பேச்சு

திமுக தீயசக்தி என்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஹைலைட்ஸ்

  • தீய சக்தியான திமுகவை தமிழ்நாட்டில் இருந்து வேரறுக்க வேண்டும் - எடப்பாடி
  • மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் அதிமுக இறங்கியுள்ளது
  • தேமுதிக உடனான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது

எதிரிகளை ஓட ஓட விரட்டி அடிக்கும் தேர்தலாக வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் அமைய வேண்டும் என்று தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மக்களவை தேர்தலில் வலுவான கூட்டணியை அமைக்கும் நடவடிக்கையில் அதிமுக ஈடுபட்டு வருகிறது. பாமக, பாஜக கட்சிகள் அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. பாமகவுக்கு 7-ம், பாஜகவுக்கு 5 இடங்களும் அளிக்கப்பட்டுள்ளன.

தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர்கள் நிபந்தனைக்கு அதிமுக நிர்வாகிகள் கட்டுப்பாடுகள் விதித்து வருவதால் இழுபறி நீடிக்கிறது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது-

அதிமுக கூட்டணியல் பாமக, பாஜக, என்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஒரு மெகா கூட்டணியை நாம் அமைத்துள்ளோம். இன்னும் சில கட்சிகள் சேர்வார்கள்.

தேர்தல் முடிவுகள் மூலம் இந்த கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி என்பதை தொண்டர்கள் நிரூபித்துக் காட்ட வேண்டும். அதிமுக கூட்டணி வேட்பாளர்களை பல லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

தீய சக்தியாக இருப்பது திமுக. அந்தக் கட்சியை தமிழகத்திலிருந்து வேரோடு அறுப்பதற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியமான ஒன்று. நாம் எதிரிகளை ஓட ஓட விரட்டி அடிக்கின்ற தேர்தலாக வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் அமைய வேண்டும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

 

மேலும் படிக்க -“மரண பீதியில் இருந்தேன்'' - ஜெயலலிதா குறித்து சு. சுவாமி ஓப்பன் டாக்!!

.