This Article is From Jun 18, 2019

அடம்பிடிக்கும் ராகுல்! மக்களவை காங்கிரஸ் தலைவராகிறார் ரஞ்சன் சவுத்ரி!!

கடந்த முறை மக்களவை காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இருந்தார். இந்த முறை அவர் தேர்தலில் தோற்று விட்டதால் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

ரஞ்சன் சவுத்ரி 5-வது முறையாக மக்களவை எம்.பி.யாக இருந்து வருகிறார்.

ஹைலைட்ஸ்

  • மக்களவை காங்கிரஸ் தலைவர் தேர்வு செய்வதற்கான கூட்டம் காலை நடைபெற்றது
  • 5-வது முறையாக மக்களவை உறுப்பினராக இருக்கிறார் ரஞ்சன் சவுத்ரி
  • மக்களவைக்கு காங்கிரஸ் தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
New Delhi:

மக்களவை காங்கிரஸ் தலைவர் பொறுப்பை மேற்கு வங்கத்தை  சேர்ந்த மூத்த தலைவர் ரஞ்சன் சவுத்ரி வகிப்பார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. மக்களவை காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்கமாட்டேன் என்று ராகுல் காந்தி அடம்பிடித்து வருகிறார். அவரை சமாதானப்படுத்த மூத்த தலைவர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தன. 

இதையடுத்து ரஞ்சன் சவுத்ரியின் பெயரை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இன்று காலை ஆலோசனைக் கூட்டம் நீண்ட நேரமாக நடைபெற்றது. கூட்டத்தில் சோனியா காந்தி கலந்து கொண்டார். 

இதன்பின்னர் மக்களவைக்கு காங்கிரஸ் தரப்பில் எழுதப்பட்ட கடிதத்தில், ரஞ்சன் சவுத்ரி கட்சியின் மக்களவை தலைவராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த முறை மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மக்களவை காங்கிரஸ் தலைவராக செயல்பட்டு வந்தார். இந்தமுறை அவர் தேர்தலில் தோல்வியை தழுவியதால் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. 

'ஒரே தேசம் ஒரே தேர்தல்' தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த முறையை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. நடைமுறையிலும், தர்க்க ரீதியிலும், சட்ட முறையிலும் நாடு முழுவதும் ஒரே தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து மக்களவை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ரஞ்சன் சவுத்ரி, கேரளாவின் கே. சுரேஷ், கட்சியின் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி, திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆகியோரின் பெயர்கள் ஆலோசிக்கப்பட்டன. 

ரஞ்சன் சவுத்ரி 5 -வது முறையாக மக்களவை எம்.பி.யாக இருந்து வருகிறார். அவையில் நீண்ட காலம் அவருக்கு நல்ல அனுபவம் உண்டு என்ற அடிப்படையில் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 

.