This Article is From Feb 12, 2019

''ஏழை மாணவர்கள் கல்லூரிகளில் சேர நிதியுதவி'' - தொடர்புகொள்ள நடிகர் சூர்யா கோரிக்கை

வறுமை காரணமாக கல்வியை தொடர முடியாத மாணவர்களின் விவரத்தை 80561 34333 அல்லது 98418 91000 என்ற எண்ணுக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த எண்களை வகுப்பறை கரும்பலகைகளில் எழுதிப்போடும்படியும் கூறியுள்ளார் நடிகர் சூர்யா. 

''ஏழை மாணவர்கள் கல்லூரிகளில் சேர நிதியுதவி'' - தொடர்புகொள்ள நடிகர் சூர்யா கோரிக்கை

நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷனை நடத்தி வருகிறார்.

ஹைலைட்ஸ்

  • நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் கல்வி உதவி செய்து வருகிறது
  • ஆசிரியர்களுக்கு சூர்யா கோரிக்கை வைத்துள்ளார்
  • தகுதியுள்ளவர்கள் 80561 34333 / 98418 91000 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை, எளிய மாணவர்கள் கல்வியை தொடர்ந்திட நிதியதவி வழங்கப்படும் என்று நடிகர் சூர்யா அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சூர்யா, ''வறுமை காரணமாக கல்வியை தொடர முடியாத மாணவர்களின் விவரத்தை அரசுப்பள்ளி ஆசிரியர்கள்  80561 34333 அல்லது 98418 91000 என்ற எண்ணுக்கு தெரிவிக்க வேண்டும்'' வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா அகரம் பவுண்டேஷனை தொடங்கி, கல்விச் சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு அகரம் பவுண்டேஷன் மூலம் ஆண்டுதோறும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி அடுத்த கல்வியாண்டுக்கான கல்வி உதவியை வழங்க நடிகர் சூர்யா முன்வந்துள்ளார். 

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் நடிகர் சூர்யா கூறியிருப்பதாவது-

அரசுப்பள்ளி மாணவர்கள் கல்லூரிகளில் உயர் கல்வி பெற அகரம் ஃபவுண்டேஷன் கடந்த 10 ஆண்டுகளாக துணைபுரிகிறது. பெற்றோரை இழந்து, ஆதரவற்ற, வறுமை காரணமாக மேற்கொண்டு கல்வி தொடர முடியாத மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குகிறது. 

இதுவரை சுமார் 2,500 மாணவர்கள் அகரம் விதைத் திட்டத்தின் மூலம் பயன் அடைந்துள்ளார்கள். 2019-ம் ஆண்டு ப்ளஸ் டூ தேர்வு எழும் மாணவர்களில் தகுதியும், திறமையும் வாய்ந்த ஏழை மாணவர்களை அகரத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களையும், ஆசிரிய பெருமக்களையும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

வறுமை மற்றும் குடும்பச் சூழல் காரணமாக கல்வியை தொடர முடியாமல் போகிற மாணவர்களை 80561 34333 அல்லது 98418 91000 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். 

இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.

.