''வெங்காய விலை உயர்வு என்பது மத்திய அரசின் பெரும் ஊழல்'' - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!!

அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத பொருளாக இருக்கும் வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது.

''வெங்காய விலை உயர்வு என்பது மத்திய அரசின் பெரும் ஊழல்'' - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!!

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்திய ஆம் ஆத்மி எம்.பி.க்கள்.

New Delhi:

வெங்காய விலை உயர்வு என்பது மத்திய அரசின் பெரும் ஊழல் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்பாக ஆம் ஆத்மி எம்.பி.க்கள் வெங்காய மாலை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்தின்போது ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

வெங்காய விலை உயர்வு என்பது மிகப்பெரிய ஊழல். மொத்தம் 32 ஆயிரம் மெட்ரிக் டன் அளவு வெங்காயங்கள் அழுகி விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தினமும் 10 லாரி வெங்காயத்தை டிசம்பர் 9-ம்தேதி வரை வழங்குமாறு டெல்லி அரசு கோரிக்கை வைத்திருக்கிறது. கடந்த 23-ம்தேதியில் இருந்து டெல்லி அரசின் வெங்காய விநியோகத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. 

கடந்த செப்டம்பர் 5-ம்தேதி, தங்களிடம் 56 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயம் இருப்பில் உள்ளதாக மத்திய அரசு கூறியிருந்தது. அப்படியிருக்கையில் 32 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயம் எப்படி அழுகியிருக்க முடியும்?. அவற்றை ஏன் முன்பே குறைந்த விலைக்கு மத்திய அரசு விற்கவில்லை. வெங்காயத்தை அழுக வைப்பதற்கு மத்திய அரசால் முடிகிறது. ஆனால் மக்களுக்கு அவற்றை வழங்க மத்திய அரசால் முடியவில்லை. 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

முன்னதாக இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, 'வெங்காய விலை உயர்ந்து கொண்டிருந்தபோது கடந்த செப்டம்பர் 5-ம்தேதி டெல்லி அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியது. அந்த கடிதத்தில் 56 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயம் இருப்பில் உள்ளதாகவும், தேவைப்படும்போது கொள்முதல் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதன்பின்னர் தினமும் 10 லாரி வெங்காயம் அதாவது, 2.50 லட்சம் கிலோ வெங்காயத்தை கொள்முதல் செய்வதாக மத்திய அரசிடம் கூறினோம். ஆனால் எங்களுக்கு வழங்கப்படவில்லை. ஏன் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. கடந்த செப்டம்பர் 5-ம்தேதி மத்திய அரசு தெரிவித்த வெங்காய இருப்பு எங்கே போனது?' என்று கேள்வி எழுப்பினார். 

கடந்த மாதம் 20-ம்தேதி வெங்காயம் தட்டுப்பாடு காரணமாக 1.20 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

More News