This Article is From Feb 15, 2019

ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2000 வழங்குவதற்கு எதிராக தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

ஏழை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2000 நிதி வழக்குவதற்கான தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிராக முறையீடு செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2000 வழங்குவதற்கு எதிராக தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள 60 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக தலா ரூ.2000 வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இதன் மூலம் இம்மாத இறுதிக்குள் பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு அனைத்து பயனாளிகளுக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் அவர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக சட்டப் பஞ்சாயத்து இயக்கம் தமிழக அரசின் அறிவிப்பு சட்டவிரோதம் எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. அப்போது, தமிழக அரசு புள்ளிவிவர அடிப்படையிலேயே, மொத்த மக்கள் தொகையில் 11.9 சதவீதம் பேர் தான் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதாகவும், அதனடிப்படையில் 18 லட்சம் பேர் மட்டுமே பலனடைய தகுதியுடையவர்கள் என குறிப்பிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி, 60 லட்சம் பேர் என்பது இந்த ஆண்டில் மட்டும் எடுக்கப்பட்ட எண்ணிக்கை அல்ல என்றும், 2006 முதல் ஏழை குடும்பங்கள் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு அட்டை வழங்கியும், பதிவேடு பராமரித்தும் கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அரசு அளித்த புள்ளிவிவரங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு, 2011-12ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் தற்போது மாறியிருக்கும், ஆனால் 2018-19 புள்ளிவிவரங்களை குறிப்பிட்டு வழக்கு தொடரவில்லை என்றும், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் எத்தனை பேர் என மனுதாரர் குறிப்பிடவில்லை என்றும் குறிப்பிட்டனர். இவை அனைத்தும் அரசின் கொள்கை முடிவுகள் என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
 

.