சத்தீஸ்கரில் போலீஸ் முன்னிலையில் சரணடைந்த 62 நக்சல்ஸ்!

சத்தீஸ்கரில் வரும் நவம்பர் 12 மற்றும் 20 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

சத்தீஸ்கரில் போலீஸ் முன்னிலையில் சரணடைந்த 62 நக்சல்ஸ்!

மாவோயிஸ்ட்டுகள் சரணடைந்தது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

Raipur:

நக்சல் அமைப்பைச் சேர்ந்த 62 பேர், போலீஸ் முன்னிலையில் ஆயுதங்களுடன் சரணடைந்துள்ளனர். 

சத்தீஸ்கரில் வரும் நவம்பர் 12 மற்றும் 20 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 11 ஆம் தேதி தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் அமைதியாக நடைபெறுவதை மாவோயிஸ்ட்டுகள் அனுமதிக்க மாட்டார்கள் என்று கருதப்படுவதால் அங்கு ஏராளமான பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

உச்சக்கட்ட பாதுகாப்பையும் மீறி, சில நாட்களுக்கு முன்னர் செய்தி சேகரிப்பதற்காக சென்றிருந்த தூர்தர்ஷன் குழுவை நக்சல் தரப்பினர் தாக்கினர். இந்த சம்பவத்தில் தூர்தர்ஷ்ன் குழுவைச் சேர்ந்த கேமரா மேன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அங்கு பதற்றமான இடங்களில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இப்படிப்பட்ட சூழலில் தான், 62 நக்சல் அமைப்பினர் சரணடைந்துள்ளனர். இது குறித்து, பஸ்தர் ஐ.ஜி, விவேகானந்த் சின்ஹா, ‘நாராயண்பூர் மாவட்டத்தில் தான் 62 நக்சல் அமைப்பினரும் ஆயுதங்களுடன் எங்களிடம் சரண்டைந்தனர். ஜனதா சர்கார் அமைப்பிற்குக் கீழ் அவர்கள் 8 அல்லது 9 ஆண்டு காலமாக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தனர்' என்று தகவல் தெரிவித்துள்ளார். 

மாவோயிஸ்ட்டுகள் சரணடைந்தது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘சத்தீஸ்கரில் பெரும் அளவிலான இடதுசாரி தீவிரவாதிகள் போலீஸ் முன்னிலையில் சரணடைந்துள்ளது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். மாவோயிஸ்ட்டுகள் சரண்டைந்தால், அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கப்படும் என்று சத்தீஸ்கர் அரசு அறிவித்தத் திட்டத்தினால் ஏற்படும் பலன்கள் சந்தோஷம் அளிக்கின்றன. இது சத்தீஸ்கரின் பாதுகாப்பில் பெரும் பங்காற்றுகின்றது' என்று கருத்து தெரிவித்துள்ளார்.