This Article is From Aug 06, 2019

அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து: 6 பேர் பலி, 11 பேர் படுகாயம்!

டெல்லியில் தீ விபத்து: தெற்குடெல்லியின் ஜாகீர் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவு 2 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

காயமடைந்தவர்களில் தங்களைக் காப்பாற்றுவதற்காக கட்டிடத்திலிருந்து குதித்தவர்களும் அடங்குவர்.

New Delhi:

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்றிரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட, 6 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள ஜாகிர் நகரில் உள்ள நான்கு மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. நள்ளிரவு 2 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தின் போது, பெரும்பாலான குடியிருப்பாளர்கள் அசந்து தூங்கிக்கொண்டிருந்துள்ளனர். இதனால், தீ வேகமாக கட்டிடம் முழுவதும் பரவியது. 

இதைத்தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திறக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், விரைந்து செயல்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 11 பேர் படுகாயமடைந்தனர். 

விபத்து நடந்த இடத்திலிருந்து, 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் தங்களைக் காப்பாற்றுவதற்காக கட்டிடத்திலிருந்து குதித்தவர்களும் அடங்குவர். இதில் இரண்டு தீயணைப்பு வீரர்களும் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த 7 கார்கள் மற்றும் 19 இருசக்கர வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தன. 8 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு கடும் போராட்டத்திற்கு பிறகே தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. 

காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். தொடரந்து, இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், அடுக்குமாடி குடியிருப்பின் மின்சார பெட்டியில் இருந்தே தீ விபத்து ஏற்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. 


இந்த சம்பவம் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, ஜாகீர் நகர் தீ விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிடுகிறேன். பாதிக்கபட்டவர்களின் குடும்பத்திற்கு டெல்லி அரசு அனைத்து உதவிகளையும் செய்து தரும் என்று அவர் கூறியுள்ளார். 

 

.