This Article is From Jul 24, 2019

“பாகிஸ்தானில் 40 தீவிரவாத குழுக்கள் செயல்பட்டன… உண்மையைச் சொல்லவில்லை”- இம்ரான் கான் 'பகீர்'

"இப்போதிலிருந்து அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு என்பது சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்”

“பாகிஸ்தானில் 40 தீவிரவாத குழுக்கள் செயல்பட்டன… உண்மையைச் சொல்லவில்லை”- இம்ரான் கான் 'பகீர்'

போர் எங்களுக்கு எதிராக சென்றபோது, தவறான முடிவுகள் எடுக்கப்பட்டன- இம்ரான் கான்

Washington:

பாகிஸ்தானில் 40 தீவிரவாத குழுக்குள் செயல்பட்டன. இது குறித்த உண்மையை முன்னர் எங்கள் நாட்டை ஆண்ட கட்சிகள் சொல்லவில்லை என்று பகீர் கிளப்பும் தகவலை தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். 

“தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்த்து நாங்கள் போராடிக் கொண்டிருந்தோம். 9/11 தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்கானிஸ்தானில் இருந்துதான் அல்-கய்தா தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வந்தது. தாலிபான் தீவிரவாதிகளும் பாகிஸ்தானில் இருக்கவில்லை. அதனால்தான் அமெரிக்காவுடன் இணைந்து நாங்கள் சண்டையிட்டோம். ஆனால், போர் எங்களுக்கு எதிராக சென்றபோது, தவறான முடிவுகள் எடுக்கப்பட்டன. பாகிஸ்தானில் இருந்த உண்மை நிலை அமெரிக்காவுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. இதற்கு முன்னர் அமைந்த அரசுகள்தான் அதற்குக் காரணம்” என்று அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இம்ரான் கான் பேசியுள்ளார். 

அவர் மேலும், “அப்படி நடந்ததற்குக் காரணம், பாகிஸ்தான் அரசிடம் அனைத்து அதிகாரமும் இருக்கவில்லை. பாகிஸ்தானில் இருந்து மட்டும் சுமார் 40 தீவிரவாத குழுக்கள் செயல்பட்டன. ஒரு கட்டத்தில் என்னைப் போன்றவர்கள், இந்த சூழலில் பிழைத்திருக்க முடியுமா என்று கூட அச்சப்பட்டோம். அந்த சமயத்தில் அமெரிக்காவுக்கு நாங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். உண்மையில் எங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே சிரமமாக இருந்த காலகட்டம் அது.

இப்படிப்பட்ட சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்துப் பேசியிருப்பது சரியானது. நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றால், இருவருக்கும் இடையில் நம்பிக்கை இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறேன். இப்போதிலிருந்து அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு என்பது சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார். 

ஆப்கானிஸ்தானில் தாலிபான் விவகாரம் குறித்து பேசிய இம்ரான் கான், “இதுவரை தாலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் விஷயத்தில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவே பார்க்கிறேன். இந்த பேச்சுவார்த்தை சுலபமானதாக இருக்கப் போவதில்லை. ஆனால், பாகிஸ்தான் சார்பில் என்னால் முடிந்த அனைத்து நடவடிக்கையையும் எடுத்து வருகிறேன். என் பின்னால் பாகிஸ்தான் ராணுவம், பாதுகாப்புப் படையினர் என எல்லோரும் ஒரே குறிக்கோளுடன் நிற்கின்றனர். அது ஆப்கானிஸ்தானில் அமைதியான சூழல் திரும்ப வேண்டும் என்பதுதான்” என்று பேசியுள்ளார். 
 

.