This Article is From Feb 03, 2020

அச்சுறுத்தும் கொரோனா: கேரளாவில் 3வது நபருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி!

Coronavirus: இந்தியாவில் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில்...

அச்சுறுத்தும் கொரோனா: கேரளாவில் 3வது நபருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி!

Coronavirus: இது குறித்த தகவலை அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார். 

Coronavirus: கொரோனா வைரஸ்... கடத்த சில வாரங்களாக ஆசிய நாடுகள் மட்டும் இன்றி உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வருகின்ற விஷயம். சீனாவில், குறிப்பாக வுஹான் நகரில் தோற்றியதாக கருதப்படும் கொரோனா பயத்தால் இந்தியா, மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகள் சீனாவில் வசித்து வந்த தங்கள் நாட்டு குடிமக்களை சொந்த நாட்டிற்கே அழைத்து வருகின்றன. இந்தியாவில் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், கேரளாவில் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது. ஏற்கெனவே அந்த மாநிலத்தில் இருவருக்கு கொரோனா வைரஸ் இருந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 3வது நபருக்கு அதன் பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார். 

இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் மட்டும் கடந்த நான்கு நாட்களில் 350-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். சீனாவில் உஹான் நகரத்தில்தான் இந்த வைரஸ் தொற்று உருவாகி, மற்ற இடங்களுக்குப் பரவி வருகிறது. தற்போது கேரளாவுக்குத் திரும்பியுள்ள உஹானிலிருந்த 3 மாணவிகளுக்குத்தான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ், 20 நாடுகளில் பரவியுள்ள நிலையில், அதை உலக சுகாதார அவசரநிலையாக பிரகடனப்படுத்தியுள்ளது உலக சுகாதார அமைப்பு. 

“கேரளாவில் 3வது நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் உஹானிலிருந்து அவர் இந்தியாவுக்கு வந்துள்ளார். வைரஸ் பாதிப்புடைய அந்த நபர் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்,” என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

“காசார்கோட்டில் இருக்கும் கஞ்சங்காடு மாவட்ட மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,” என்று கேரள சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா கூறியுள்ளார். 

இதுவரை கண்டறியப்பட்டுள்ள 3 பாதிப்புகளுமே கேரள மாநிலத்தின் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்துள்ளன. அம்மாநிலத்தில் 1,700 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ என்கிற சந்தேகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் 70 பேர் மருத்துவமனைகளில் தனி வார்டுகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

கேரளாவில் முதலாவதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தென்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து மாநிலத்துக்கு வரும் அனைவரும் சுகாதாரத் துறையிடம் தங்களது உடல் ஆரோக்கியம் குறித்து சோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

அதேபோல மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமும், ஜனவரி 1 முதல் சீனாவில் இருந்து வந்தவர்கள், காய்ச்சல், சலி போன்ற பிரச்னை ஏற்படுமாயின் அருகில் இருக்கும் சுகாதார மையங்களில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை வரை சுமார் 52,000 பயணிகள் பல்வேறு விமான நிலையங்களில் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

கொரோனா எதிரொலியாக, நேற்று சீனாவுக்கான ஆன்லைன் விசா நடைமுறையை ரத்து செய்தது இந்தியா. தற்போது நிலவும் சூழல் குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், “பிரதமர் நரேந்திர மோடி, சூழலை தனிப்பட்ட முறையில் உன்னிப்பாக கவனித்து வருகிறார். கேரளா சுகாதாரத் துறை அமைச்சகத்திடமும் நான் தொடர்பில் இருக்கின்றேன்,” என்றுள்ளார்.

கொரோனா வைரஸ் மூலம் சலி முதல் மிக வீரியமான நோய்கள் வரக்கூடும். காய்ச்சல், சலி, சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்டவை இதன் அறிகுறிகள். இந்த நோயின் தாக்கம் அதிகமானால், கடும் ஜுரம், கிட்னி பாதிப்பு அல்லது இறப்பு நேரிடலாம்.

.