டெல்லி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து! 43 பேர் பலி - மீட்பு பணியில் 30 வாகனங்கள்!!

குறைந்தது 43 பேர் உயிரிழந்திருப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு டெல்லியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இந்த கோர தீ விபத்து இன்று காலை நடந்திருக்கிறது.

சுமார் 30 வாகனங்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. ஆனஜ் மண்டி என்ற பகுதியில் தீ விபத்து நடந்திருக்கிறது.

டெல்லியில் இன்று காலையில் தொழிற்சாலை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர சம்பவத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு டெல்லியில் ராணி ஜான்சி சாலையில் ஆனஜ் மண்டி என்ற பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதிகாலை 5 மணிக்கு ஏற்பட்ட இந்த சம்பவத்தில் சிக்கி, உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர்.

சுமார் 30 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீணை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

மிகச் சரியாக காலை 5.22- க்கு தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாக தீயணைப்பு படைக்கு தொலைப்பேசி அழைப்பு மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 30 வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

தொழிற்சாலைக்குள் சிக்கிய சுமார் 20 பேர் மீட்கப்பட்டு அவர்கள் டெல்லியின் ராம் மனோகர் லோகியா மற்றும் ஹிந்து ராவ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தீ விபத்து காரணமாக போக்குவரத்தில் போலீசார் மாற்றங்களை செய்துள்ளனர். புனித ஸ்டீபன் சாலையில் வருவோர் ஜந்தேவாலன் வரியாக ராணி ஜான்சி மேம்பாலத்தை பயன்படுத்திச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

தீ விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தீயணைப்பு வீரர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுகின்றனர் என்றும், விபத்து சோகத்தை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதாக அவர் தகவல் தெரிவித்திருக்கிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பதிவில், 'விலைமதிப்பற்ற உயிர்கள் டெல்லியில் நேர்ந்த தீ விபத்தில் பறிபோயுள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். 
அவசர நிலை அடிப்படையில் அதிகாரிகள் தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 

More News