This Article is From Sep 03, 2018

'அது நிதி உதவி அல்ல, எங்கள் உரிமை!’- அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் பதிலடி

இம்ரான் கானை சந்திக்க அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ, சீக்கிரம் பாகிஸ்தான் வர உள்ளார்

'அது நிதி உதவி அல்ல, எங்கள் உரிமை!’- அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் பதிலடி
Islamabad:

தீவிரவாத இயக்கங்களைக் கட்டுப்படுத்த இஸ்லாமாபாத் போதுமான முயற்சியை எடுக்காததால் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வந்த 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி உதவியை அமெரிக்க நிறுத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது குறித்துப் பேசியுள்ள பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹுமுத் குரேஷி, ‘நாங்கள் தீவிரவாதத்துக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்க கொடுக்க வேண்டிய தொகைதான் அந்த 300 மில்லியன் டாலர் என்பது. அது ஒன்றும் நிதி உதவி அல்ல. அது எங்கள் உரிமை’ என்று காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

எவ்வித பேதமும் இன்றி ஹக்கானி இயக்கம் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களை குறிவைத்துக் கட்டுப்படுத்த பாகிஸ்தானை அமெரிக்கா வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது பாகிஸ்தானுக்கு அளித்து வந்த கூட்டு நிதியுதவியை தடை செய்துள்ளது சலசலப்பை எற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் பென்டகன் செய்தித்தொடர்பாளர் கர்னல் ஃபாக்னர் கூறுகையில், ‘தற்போது வெளிவரும் செய்திகளில் எல்லாம் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வந்த உதவி குறித்தான செய்திகள் திரிந்து வருகின்றன. பாதுகாப்பு உதவியைத் தான் அமெரிக்கா நீக்கிக் கொள்வதாக அறிவித்திருந்தது. அதுவும் கடந்த ஜனவரி மாதம் வெளியான அறிவிப்பு ஆகும்.

தற்போது வெளியாகியிருக்கும் செய்தியைப் போல இது ஒன்றும் புதிய அறிவிப்பு இல்லை. நிதி உதவி ஒப்பந்தம் காலாவதி ஆகும் முன்னர் மறு செயலமைப்பு செய்வதற்கான ஓர் ஒப்புகை’ என்றார்.

மேலும் கர்னல் கூறுகையில், ‘அமெரிக்கா தொடர்ந்து பாகிஸ்தானுக்கு தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான அழுத்தத்தைக் கொடுத்து வருகிறது. எவ்வித பாகுபாடுகளுக்கும் இடம் அளிக்காமல் ஹக்கானி இயக்கம் உள்ளிட்ட இயக்கங்களை குறிவைக்கவும், தலிபான் தலைவரை கைது செய்து கொண்டு வர அழுத்தம் கொடுத்து வருகிறோம்’ எனக் கூறியுள்ளார்.

தெற்கு ஆசிய திட்டங்களுக்கு தீர்க்கமான ஆதரவு அளிக்காமல் உள்ள பாகிஸ்தானுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மீதம் உள்ள 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடந்த ஜூலை, 2018-ன் போது மறுசெயலமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் அந்த நிதி ஒப்பந்தம் வருகிற செப்டம்பர் மாதத்துடன் காலாவதி ஆகிறது என கர்னல் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து விரிவாக கருத்து தெரிவித்துள்ள குரேஷி, ‘தீவிரவாதத்துக்கு எதிராக நாங்கள் எடுத்த நடவடிக்கைகளில் செலவு செய்தது முழுவதும் எங்கள் பணம். அதை அவர்கள் தற்போது செலுத்துகிறார்கள். அவ்வளவுதான். நாங்கள் எடுத்த நடவடிக்கை என்பது இரு நாட்டு கூட்டு ஒப்பந்தத்தை அடுத்து செயல்படுத்தப்பட்டது. இந்த விஷயம் குறித்து நாங்கள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். எங்கள் பக்கம் உள்ள நிலைமை குறித்து அவர்களுக்கு விளக்குவோம். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, அமெரிக்கா ஒரு பக்கத்தை மட்டும் பார்த்து முடிவுக்கு வந்துள்ளது. நாங்கள் மறுபக்கத்தைக் காட்டுவோம். எங்கள் இரு நாட்டுக்கும் இடையிலான நம்பிக்கை சற்று குறைந்துள்ளது. ஆனால், அதை சரிசெய்ய கலந்து ஆலோசிப்போம். தற்போதுள்ள நிலை குறித்து ஒரு நல்ல முடிவை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எடுப்பார்’ என்று கூறியுள்ளார்.

இம்ரான் கானை சந்திக்க அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ, சீக்கிரம் பாகிஸ்தான் வர உள்ளார். இந்நிலையில் இதைப் போன்ற கருத்து மோதல்கள் இரு நாட்டுக்கும் இடையிலான உறவை சிக்கலாக்கியுள்ளது.

.