This Article is From Jun 07, 2019

3 மாணவிகள் தற்கொலை! நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்!!

நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் தமிழக மாணவிகள் 2 பேர் நேற்று தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று விழுப்புரத்தை சேர்ந்த ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் தமிழக மாணவிகள் 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

கூட்டாட்சி தத்துவத்திற்கு மதிப்பளித்து மாநிலங்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மாணவிகள் தற்கொலை விவகாரத்தை திமுக நாடாளுமன்றத்தில் எழுப்பும் என்று கூறியுள்ளார். 

பாமக இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி, கிராமத்து மாணவிகளின் மருத்துவர் ஆகும் கனவை நீட் தேர்வு அழிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார். 

இதேபோன்று நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், 'சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் நீட் தேர்வில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இது மாநில  பாடத்திட்டத்தை எடுத்து படிப்பவர்களுக்கு சிரமமாக உள்ளது. தனியார் நிறுவனங்களில் பயிற்சி பெற்ற மாணவர்களால் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும்' என்று கூறியுள்ளனர். 

தமிழகத்தில் கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விகிதம் நடப்பாண்டில் 9 சதவீதம் அதிகரித்திருக்கிறது. குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் நேற்று 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்று விழுப்புரத்தை சேர்ந்த ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

.