2010-2019: இந்தியாவைப் புரட்டிப்போட்ட “Top 10 News”

Top 10 News 2010 - 2019 : உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இரண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தன

2010-2019: இந்தியாவைப் புரட்டிப்போட்ட “Top 10 News”

Top 10 News 2010 - 2019 : கடந்த 9 ஆண்டுகளில் எண்ணி எண்ணி பெருமூச்சடையவைக்கும் சம்வங்கள் ஏராளம்.

New Delhi:

கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள் மளைக்கவைப்பவை. கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்தது போல தெரிந்தாலும், கடந்த 9 ஆண்டுகள் சுதந்திர இந்தியாவின் மிக முக்கிய வருடங்களாக முத்திரைப் பதித்துள்ளன. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இரண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தன, மிக முக்கிய சட்டமன்றத் தேர்தல்கள், நமது விண்வெளி ஆராய்ச்சியில் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கான முன்னேற்றம், வெளியுறவு மற்றும் ராணுவத் துறைகளில் நடந்த கொள்கை மாற்றங்கள், உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகள், உட்கட்டமைப்பு வசதிகளில் அசுர வளர்ச்சி, மொத்த நாடும் ஒரு சந்தையாக மாற்றிய முடிவு, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட முடிவு, உலகக் கோப்பையை வென்றது என கடந்த 9 ஆண்டுகளில் எண்ணி எண்ணி பெருமூச்சடையவைக்கும் சம்வங்கள் ஏராளம்.

அப்படி 2010 - 2019 வரை நடந்த மிக முக்கிய விஷயங்களின் தொகுப்பு இதோ:

1) நரேந்திர மோடியும் 2014, 2019 தேர்தல்களும்:

குஜராத் மாநிலத்தின் முதல்வராக 3 முறை தேர்வு செய்யப்பட்ட நரேந்திர மோடிதான், 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 2வது ஆட்சியில் ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ‘அப் கி பார், மோடி சர்கார்' மற்றும் ‘எல்லோருக்கான வளர்ச்சி' என்கிற இரு கோஷங்களை முன்வைத்து பாஜக மோடி தலைமையில் தேர்தலைச் சந்தித்தது. அந்தத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையைப் பெற நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 272-ஐ சுலபமாகத் தாண்டியது. 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு தனிப் பெரும்பான்மையுடன் ஒரு கட்சி ஆட்சி அரியணையில் ஏறியது. 5 ஆண்டுகள் உருண்டோடின. மீண்டும் 2019 பொதுத் தேர்தல் வந்தது.

இந்த முறை ‘மோடி vs யார்?' என்ற கேள்வியே முன்னின்றது. காரணம், எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒருங்கிணைப்பு இல்லாததனால், அவர்கள் தரப்பில் பிரதமர் வேட்பாளர் என்ற ஒருவர் இல்லாமலேயே தேர்தல் நடந்தன. இந்த முறையும் பாஜக பெரும்பான்மை பெற்றது. இன்னும் சொல்லப் போனால் 2014-ஐ விட, 2019 ஆம் ஆண்டில் இமாலய வெற்றி. மோடி தலைமையிலான இரண்டாவது ஆட்சி 6 மாதங்களை நிறைவு செய்துள்ள நிலையில், பல்வேறு சர்ச்சைகள் வெடித்துள்ளன. அரசு முடிவுகளுக்கு எதிராக தேசிய அளவில் போராட்டங்கள் கிளர்ந்துள்ளன. அடுத்த நான்கரை ஆண்டுகள் எப்படிப் போகும் என்பது யாரும் அறியாத ஒன்றாக இருக்கிறது. இருப்பினும் உலகின் மிக இளைய தலைமுறையினரைக் கொண்ட நாடான இந்தியாவுக்கு, அடுத்து வரும் 5 ஆண்டுகள் மிக முக்கியமானதாக இருக்கும். மோடியே அதன் சூத்திரதாரியாக இருப்பார்.
 

5707q7as

2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடியின் பிரதமராக பொறுப்பேற்றார்.

2) விண்வெளியில் இந்தியா பதித்த மைல்கல்!

2014 ஆம் ஆண்டு, செவ்வாய் கிரகத்தை அடைய இந்தியா முதன்முறையாக ‘மங்கல்யான்' மூலம் முயற்சி மேற்கொண்டது. முதல் முயற்சியிலேயே அசாத்திய வெற்றி பெற்றது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ. வெறும் 74 மில்லியன் டாலர் மதிப்பில் இந்த வெற்றியைப் பெற்றது இஸ்ரோ. உலகமே இந்தியாவை வியந்து பார்த்தது.

அதைத் தொடர்ந்து ஒரே ராக்கெட்டில் 100 செயற்கைக்கோள்களுக்கு மேல் ஏற்றிச் சென்று, வெற்றிகரமாக புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்த, பணியை ஆரம்பித்தது இஸ்ரோ. பிப்ரவரி 2017-ல், பிஎஸ்எல்வி-சி37 மூலம் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி, செய்ய முடியாததை செய்து காட்டி பாராட்டுகளைப் பெற்றது இந்தியா.

அடுத்த இலக்காக, சந்திராயன்-2 திட்டம் கையிலெடுக்கப்பட்டது. 2019, ஜூலை மாதம் சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட்டது. முதன் முறையாக நிலவின் தென் துருவத்தில் ‘லேண்டர்' மற்றும் ‘ரோவரை' இறக்கி ஆராய்ச்சியில் ஈடுபட எத்தனித்தது இஸ்ரோ. ஆனால், இந்த திட்டம் 90 சதவிகித வெற்றியை மட்டுமே பெற்றது. ஆர்பிட்டர் வெற்றிகரமாக நிலவைச் சுற்றி ஆராய்ச்சி நடத்திய நிலையில், லேண்டர் மற்றும் ரோவர் விபத்துக்கு உள்ளானது. 

அடுத்ததாக 2022 ஆம் ஆண்டு, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப ‘ககன்யான்' திட்டம்தான் இஸ்ரோவின் டார்கெட். மீண்டும் செவ்வாய் மற்றும் வீனஸ் கிரகங்களுக்கு செயற்கைக் கோள் அனுப்புவது. சூரியனை ஆராய்ச்சி செய்ய தனி திட்டம். ஜுப்பிட்டர் கிரகத்தை ஆராய புதிய திட்டம் என்று அடுத்தடுத்து வியக்கவைக்கிறது இஸ்ரோ.

jsgj0804

104 செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது இஸ்ரோ.

3) ஜிஎஸ்டி வரிமுறை!

இந்தியா முழுவதற்கும் ஒரு வரி முறையைக் கொண்டு வருவதற்கு, 2017 ஆம் ஆண்டு, ஜூலை 1 ஆம் தேதி, ஜிஎஸ்டி வரி அமல் செய்யப்பட்டது. இந்த வரி முறை மூலம் மொத்த நாடும் ஒரே சந்தையாக மாற்றப்பட்டது. ஒரே வரி முறை பின்பற்றப்படும் என்பதால், சரக்குகளை ஒரு மாநிலத்திலிருந்து இன்னோன்றுக்கு கொண்டு செல்வது சுலபமாக்கப்பட்டது. 

ஜிஎஸ்டி வரி முறையில் பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும், எதிர்காலத்தில் அது பயன் தரும் என்று அரசு தரப்பு சொல்கிறது. 

bjpskkao

ஜிஎஸ்டி வரியை அமல் செய்யும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி.

4) பணமதிப்பிழப்பு நடவடிக்கை:

அன்றைய நாள் அவ்வளவு எளிதில் யாருக்கும் மறந்துவிடாது. 2016, நவம்பர் 8… அனைத்துத் தொலைக்காட்சிகளும் பிரதமர் நரேந்திர மோடியின் உரையைத்தான் போட்டுக் காண்பித்தன. திரையில் தோன்றிய பிரதமர், ‘இன்றிலிருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என்று கூறினார். கருப்புப் பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் கூறினார். மக்கள் தங்களிடம் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் அதே ஆண்டு, டிசம்பர் 31 ஆம் தேதிக்குகள் செலுத்த வேண்டும் என்றும், ஒரு நாளைக்கு 2,500 ரூபாய்க்கு மேல் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கப்படாது என்றும் கூறப்பட்டது. 50 நாட்களில் பிரச்னை சரி செய்யப்பட்டுவிடும் என்று மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால், இயல்பு நிலை திரும்ப பல மாதங்கள் எடுத்தன.

மக்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகினர். இது மிக முக்கிய நடவடிக்கை என்று பாஜக தரப்பு சொன்னது. ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பணமதிப்பிழப்பு, ‘சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய ஊழல்' என்றது. எது எப்படியோ, இந்திய பொருளாதாரத்திலும் மக்கள் மத்தியிலும் நம்ப முடியாத தாக்கங்களை ஏற்படுத்தியது பணமதிப்பிழப்பு நடவடிக்கை. 

900gpbb4

பணத்தை எடுக்க ஏடிஎம் வாசலில் வரிசையில் நிற்கும் மக்கள்

5) நிர்பயா கூட்டு பாலியல் பலாத்காரம்; கொதித்தெழுந்த இந்தியா!

2012, டிசம்பர் 16 ஆம் தேதி, டெல்லியில் ஓடும் பேருந்தில் பிசியோதெரபி பயின்று வந்த மாணவி, 6 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பல மணி நேரம் அவரை பலாத்காரம் செய்தவர்கள், அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் இறும்புக் கம்பியை வைத்து வன்முறை வெறியாட்டம் ஆடினர். 13 நாட்களுக்குப் பின்னர் அந்தப் பெண்… நிர்பயா… பரிதாபமாக உயிரிழந்தார். இந்தியாவே கொந்தளித்தது. 6 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். 2013 ஆம் ஆண்டு அனைவருக்கும் தூக்குத் தண்டனை விதித்தது நீதிமன்றம். அடுத்தடுத்து சீராய்வு மனுக்கள் போடப்பட்டாலும் உச்ச நீதிமன்றம் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. ஒருவன் குற்றம் நடந்தபோது சிறுவனாக இருந்ததால், அவன் 3 ஆண்டு சிறார் சிறையிலிருந்து இருந்துவிட்டு வெளியே வந்தான். ஒருவன் தீர்ப்பு வருவதற்கு முன்னரே, சிறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டான். 7 ஆண்டுகளுக்குப் பின்னரும் மீதமுள்ள 4 பேருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. நிர்பயாவின் பெற்றோர் நீதியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்…

rjcjdr4

நிர்பயாவுக்கு நீதி கேட்டு டெல்லியில் போராடிய மக்கள்

6) உலகக் கோப்பையை வென்றது இந்தியா:

மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி, 2011 ஆம் ஆண்டு நடந்த கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்திய இந்தியா, 27 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் உலகக் கோப்பையை கையில் ஏந்தியது. 274 ரன்களை சேஸ் செய்த இந்தியா, சேவாக் மற்றும் சச்சினை முதலிலேயே இழந்தாலும், கேப்டன் தோனி கடைசி வரை களத்தில் நின்றார். அவர் கடைசி ரன்களை சிக்ஸர் மூலம் கடந்ததை எந்த கிரிக்கெட் ரசிகனாலும் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. 

யுவராஜ் சிங் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் கனவு நனவான நாள் அன்று. மொத்த இந்தியாவும் இன்பச் செருக்கில் திளைத்தது. கிரிக்கெட் என்ற மதம் இந்தியாவை ஒன்றிணைத்தது.

ibbi5fnk

உலகக் கோப்பை வெற்றியை சச்சின் டெண்டுல்கருக்கு சமர்பித்தார் கேப்டன் தோனி.

7) சர்ஜிக்கல் ஸ்டிரைக், பாலகோட் தாக்குதல்:

செப்டம்பர் 2016-ல், இந்திய ராணுவம் ஜம்மூ காஷ்மீரை ஒட்டியிருந்த பாகிஸ்தான் தீவிர முகாம்கள் மீது நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். முன்னதாக, 2016 ஆம் ஆண்டு, காஷ்மீரின் உரியில், ராணுவ வீரர்களுக்கு எதிராக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 16 பேரை கொன்று குவித்தனர். இந்த சம்பவத்துக்கு பழி தீர்க்கும் வகையில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் அமைந்தது.

காஷ்மீரின் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பினர் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரழந்தனர். இது நடந்தது 2019, பிப்ரவரி 14. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட பாலகோட், ஜெய்ஷ் தீவிரவாத முகாம் மீது பிப்ரவரி 26 ஆம் தேதி, இந்திய விமானப் படை வான் வழித் தாக்குதல்களை நடத்தியது. இதில் பல நூறு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 
 

9gat72gc

சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்.

8) உச்ச நீதிமன்றத்தின் முத்திரைப் பதித்த தீர்ப்புகள்:​

சபரிமலைத் தீர்ப்பு: சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை அளித்தது உச்ச நீதிமன்றம். இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து பல்வேறு பெண்கள், செயற்பாட்டாளர்கள் ஐயப்பன் கோயிலுக்குச் சென்றனர். அவர்களை வலதுசாரி அமைப்பினர் தடுத்து நிறுத்தியதால் பதற்றம் நிலவியது. இன்று வரையில் அந்தப் பிரச்னை தொடர்ந்து வருகிறது. தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுவில் உச்ச நீதிமன்றம், ‘7 பேர் கொண்ட பெரிய அமர்வு வழக்கை விசாரிக்கும்' என்று மட்டும் கூறியுள்ளது. 

முத்தலாக் தீர்ப்பு: முஸ்லிம் பெண்களை அவர்களின் முஸ்லிம் கணவர்கள், மூன்று முறை தலாக் என்று சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு முடக்குப் போட்டது நீதிமன்றம். தலாக் சொல்லி விவாகரத்து செய்தால் தண்டனை விதிக்கும் சட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வந்தது. 

377வது சட்டப் பிரிவு குறித்த தீர்ப்பு: ஓர் பாலின ஈர்ப்பினால் வயது வந்தவர்கள் உடலுறவு கொண்டால் அது குற்றமாகாது என்று 2018, செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஓர் பாலின ஈர்ப்பாளர்கள் விஷயத்தில் இந்தியா எடுத்த மிக முக்கிய முடிவாக இது பார்க்கப்படுகிறது. 
 

ae4gbcs

377வது சட்டப் பிரிவை மாற்றியமைத்த இந்தியா

9) அயோத்யா பிரச்னை பற்றிய தீர்ப்பு:

1992 ஆம் ஆண்டு, வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள், உத்தர பிரதேச மாநில, அயோத்யாவில் இருந்த பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கினர். அதைத் தொடர்ந்து போடப்பட்ட வழக்கில், அலகாபாத் நீதிமன்றம் சம்பந்தபட்ட தரப்புகளுக்கு பிரச்னைக்குரிய இடத்தை மூன்றாக பிரித்துத் தந்தது. இந்த தீர்ப்பு கொடுக்கப்பட்டது 2010 ஆம் ஆண்டு. அதை எதிர்த்து மறு சீராய்வு மனு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு மத்தியில் மத்தியஸ்தம் செய்ய நடவடிக்கை எடுத்தது. அதில்  உடன்படிக்கை எட்டப்படவில்லை. தொடர்ந்து இந்த ஆண்டு நவம்பர் மாதம், ராம் லல்லா தரப்புக்கு பிரச்னைக்குரிய இடம் தர தீர்ப்பு வழங்கப்பட்டது. முஸ்லிம்கள் மசூதி கட்ட அயோத்தியிலேயே 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்துத் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. 
 

4dids1ls

இந்த ஆண்டு நவம்பர் மாதம் அயோத்யா வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

10) காஷ்மீரின் 370வது சட்டப் பிரிவு ரத்து:

ஆகஸ்ட் 5, 2019 அன்று, காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரவான 370-ஐ ரத்து செய்தது மத்திய அரசு. தொடர்ந்து ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்றைய தினமே பல நூறு அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். இன்று வரை பலர் வீட்டுச் சிறையில் இருந்து வருகின்றனர். காஷ்மீரின் பல இடங்களில் இன்று வரை இணைய சேவை முடக்கப்பட்டே இருக்கிறது. இயல்புநிலை திரும்பவிட்டது என்று அரசு சொன்னாலும், காஷ்மீரின் உண்மை நிலை இன்று வரை மர்மமாகவே இருந்து வருகிறது. 

a9vk8m7k

ஜம்மூ காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.