மாணவி பாத்திமா மரண விவகாரம் : ஐ.ஐ.டி. மாணவர்கள் உண்ணாவிரதத்தை முடித்தனர்!!

தங்களது கோரிக்கைகளை ஐ.ஐ.டி. நிர்வாகம் ஏற்பதாக உறுதி அளித்துள்ளது என்று உண்ணா விரதம் மேற்கொண்டிருந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவி பாத்திமா மரண விவகாரம் : ஐ.ஐ.டி. மாணவர்கள் உண்ணாவிரதத்தை முடித்தனர்!!

உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள்.

Chennai:

சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் மரண விவகாரத்தில் நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த மாணவர்கள் இன்று அதனை நிறைவு செய்தனர்.

தங்களது கோரிக்கைகளை ஐஐடி நிர்வாகம் ஏற்பதாக உறுதியளித்துள்ளது என்றும், இதனை ஏற்று உண்ணா விரதத்தை கைவிடுவதாகவும் மாணவர்கள் மொய்தீன் மற்றும் ஜஸ்டின் ஜோப் ஆகியோர் தெரிவித்தனர். 

ஐ.ஐ.டி.யில் மனிதவியல் துறையில் மொய்தீனும், ஜஸ்டீன் ஜோசப்பும் படித்து வருகின்றனர். கடந்த 9-ம்தேதி மாணவி பாத்திமா லத்தீப் விடுதியில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது தந்தை லத்தீப், உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மனு அளித்திருந்தார். 

இதற்கிடையே நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும், மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து விசாரிக்க கமிட்டி ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் மொய்தீன் மற்றும் ஜஸ்டின் ஜோசப் ஆகியோர் உண்ணா விரதம் மேற்கொண்டிருந்தனர். 

மாணவி பாத்திமா லத்தீப் மரணத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. முதலில் இந்த வழக்கை போலீசார் விசாரித்து வந்த நிலையில், தற்போது இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் வசம் சென்றுள்ளது. 

இந்த வழக்கில் போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும், விசாரணை முடியும் வரையில் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் ஐஐடி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

More News