This Article is From Oct 23, 2019

இந்து அமைப்பின் நிறுவனர் கொலை: 2 முக்கிய குற்றவாளிகள் கைது!

இந்து அமைப்பின் நிறுவனர் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகள் குஜராத்-ராஜஸ்தான் எல்லையில் இருந்து கைது செய்யப்பட்டனர்.

Lucknow:

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இந்து மகா சபை அமைப்பின் நிறுவனர் கமலேஷ் திவாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 2 முக்கிய குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் செயல்பட்டு வரும் இந்து அமைப்பான ஹிந்து சமாஜ் கட்சியின் நிறுவனர் கமலேஷ் திவாரி கழுத்து அறுக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்து 4 நாட்கள் கடந்த நிலையில், குற்றவாளிகள் 2 பேரை குஜராத்தில் தீவிரவாதத் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, முக்கியக் குற்றவாளிகளாக கருதப்படும் அஷ்பாக் ஷேக் (34)), மொயினுதீன் பத்தான் (27) ஆகியோர் இந்து அமைப்பின் சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்த கருத்திற்காக அவரை கொலை செய்துள்ளனர் என்றனர். 

கொலையான கமலேஷ் வீட்டின் வெளியே உள்ள சிசிடிவி வீடியோவை போலீசார் ஆய்வு செய்ததில் அதிலுள்ள இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 3 பேர் மீது சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து அந்த வீடியோவில், அவர்களது கையில் ஸ்வீட் கவர்களுடன் வீட்டிற்குள் செல்கின்றனர். அவர்கள் தீபாவளிக்கு இனிப்புகள் வழங்க செல்வதாக கூறி வீட்டிற்குள் சென்றிருக்க வேண்டும் என்றும் ஸ்வீட் பைகளுக்குள் ஆயுதங்களை மறைத்து வைத்து எடுத்து சென்றிருக்க வேண்டும் என்றும் போலீசார் சந்தேகித்தனர். 

அதில், ஒருவர் காவி நிற குர்தாவும், மற்றொருவர் சிவப்பு நிற குர்தாவும் அணிந்துள்ளனர். அந்த பெண் சிவப்பு நிற குர்தா அணிந்து வெள்ளை நிற துப்பட்டாவுடன் உள்ளார். மேலும், இந்த கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். சந்தேகிக்கப்படும் அந்த நபர்கள் யார் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 

இதனிடேய, தொடர்ந்து நடந்த விசாரணையில் குற்றவாளிகள் பல தடயங்களை விட்டுச் சென்றுள்ளது தெரியவந்தது. ரத்தம் படிந்த துணிகள், கத்திகள் அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. மேலும், அவர்கள் உண்மையான முகவரி மற்றும் பெயர்களை கொடுத்து ஹோட்டலில் அறை எடுத்துள்ளனர். 

இதுதொடர்பாக போலீஸ் டைரக்டர் ஜெனரல் ஓ.பி.சிங் கூறும்போது, போலீசாரின் அழுத்தம் காரணமாக 2 குற்றவாளிகளும் ஒவ்வொரு இடமாக மாறி வந்துள்ளனர். அவர்களால் 4 மணி நேரத்திற்கு மேல் ஒரு இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியவில்லை. மேலும், இதற்காக அவர்கள் எந்த மின்னணு சாதனங்களையும் பயன்படுத்தவில்லை என்றார். 

குற்றம் சாட்டப்பட்ட இருவருமே - சூரத்தில் வசிப்பவர்கள் இருவரும் - இந்து தலைவரைக் கொன்ற பின்னர் மேற்கு மாநிலத்திற்கு தப்பிச் சென்றதாக குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. "அவர்கள் கையில் இருந்த பணம் காலியானவுடன், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சூரத்தில் உள்ள தெரிந்தவர்களிடம் உதவிக்காக அழைத்துள்ளனர். ஆனால், இவர்கள் இருவருக்கும் நெருக்கமானவர்கள் அனைவரும் ஏற்கனவே கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து, அவர்கள் ஷம்லாஜிக்கு அருகிலுள்ள குஜராத்-ராஜஸ்தான் எல்லையில் இருந்து கைது செய்யப்பட்டனர் என "மாநில காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் இந்து சமாஜ் கட்சியை கடந்த 2015-ல் கமலேஷ் திவாரி தொடங்கினார். தனது சர்ச்சை மிகுந்த பேச்சுக்களால் மாநிலம் முழுவதும் அவர் பரபரப்பாக பேசப்பட்டு வந்தார். பல்வேறு வழக்குகளில் சிக்கிய அவரை, போலீசார் தேசப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனை எதிர்த்து அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் அவரை வழக்கில் இருந்து விடுவித்தது. 

.