ஜூன் 15ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம்!
ஹைலைட்ஸ்
- ஜூன் 15ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது
- லட்சக்கணக்கான மாணவ, மாணவியரின் நலனில் எப்படி ரிஸ்க் எடுக்க முடியும்?
- மாணவர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்குவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
10ம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூன் 15ம் தேதி நடத்த அனுமதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழக அரசு கால அட்டவணை வெளியிட்டது. ஆனால் தமிழகத்தில் தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாணவர்களை தேர்வுக்கு அனுப்பலாமா வேண்டாமா என்ற அச்சத்தில் பெற்றோர்கள் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பினர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன்?. தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு யார் பாதுகாப்பு அளிப்பது?.
லட்சக்கணக்கான மாணவ, மாணவியரின் நலனில் எப்படி ரிஸ்க் எடுக்க முடியும்? பத்தாம் வகுப்பு தேர்வை ஒரு மாதம் வரை ஏன் தள்ளி வைக்க கூடாது? மாணவர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்குவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கவனிக்கவில்லையா? 9 லட்சம் மாணவர்கள், 3 லட்சம் ஆசிரியர்கள், காவல்துறை, வருவாய் துறையினரை இக்கட்டான நிலைக்கு உள்ளாக்க வேண்டுமா? பொதுமுடக்க காலத்திலேயே பத்தாம் வகுப்பு தேர்வை நடத்த என்ன அவசியம்?
பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலையில் முடிவெடுக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை நீங்களே மீறுவீரர்களா? லட்சக்கணக்கான மாணவர்களின் நலனில் ஏன் ரிஸ்க் எடுக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, ஊரடங்கில் டாஸ்மாக்கை திறப்பதுபோல் அல்ல பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு. டாஸ்மாக் திறப்பதும் பள்ளி தேர்வும் வேறு வேறானவை. ஜூன் 15-ஆம் தேதி தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பின் தேர்வை நடத்தலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, ஜூலை 2-வது வாரத்தில் தேர்வு நடத்தலாமா என்பதை 2:30 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என அரசுத் தரப்புக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் 2.30 மணிக்கு நீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞர் விளக்கம் அளிக்காவிட்டால் தேர்வை ஒத்திவைக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.