This Article is From Sep 16, 2019

Electric vehicles: தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு: எடப்பாடி அறிவிப்பு!

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Electric vehicles: தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு: எடப்பாடி அறிவிப்பு!

தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படும் என்று புதிய மின்சார வாகன கொள்கையில் தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொருளாதார மந்தநிலை காரணமாக 18 ஆண்டுகளில் இல்லாத அளவு ஆட்டோமொபைல் துறை கடுமையாக வீழ்ச்சியடைந்து காணப்பட்டு வருகிறது. ஆட்டோமொபைல் துறையின் இந்த வீழ்ச்சிக்கு, இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்ததே மற்றொரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 

மின்சார வாகனம் வந்துவிட்டால் தற்போது நடைமுறையில் உள்ள பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாடு படிப்படியாக குறையும் என்பதாலும், தற்போது இதுபோன்ற வாகனங்களை வாங்கினால் பிரச்னைகள் வரும் என்பதாலும் பெரும்பாலான மக்கள் வாகனங்கள் வாங்காமல் தயக்கம் காட்டி வருகின்றனர்.

எனினும், ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக தற்போது, ஐசி இன்ஜின்களை நிறுத்தப்போவதில்லை என்பதை மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது. இருப்பினும், மக்களுக்கு இருந்த அச்சம் குறையாமல், புது வாகனம் வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். 

இந்நிலையில், தமிழக அரசின் புதிய மின்சார வாகன கொள்கை அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலத்தில் இன்று வெளியிட்டார். அதில், 31.12.2022 வரை தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சார வாகன தயாரிப்பாளர்களுக்கு 15 சதவீதம் முதலீட்டு மானியமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு கொள்கை முடிவு செய்துள்ளது. 

மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் வரிவிலக்கு மற்றும் முதலீட்டு மானியம் காரணமாக மின்சார வாகனங்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.

தமிழக அரசு முதல்கட்டமாக மின்சாரத்தால் இயங்கும் 525 பேருந்துகளை இயக்க உள்ளது. இந்த வாகனங்களின் விலையில், அதன் பேட்டரிக்கான விலை மட்டுமே சுமார் 50 சதவீதம் உள்ளது. நவீனத் தொழில்நுட்பம், அதிக உற்பத்தி, அரசின் சலுகைகள் போன்றவற்றால் இதன் விலை வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

.