This Article is From Sep 17, 2018

செயற்பாட்டளர்கள் கைது: உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டுக்கு மத்திய அரசு எதிர்ப்பு!

மகாராஷ்டிர போலீசார் கடந்த மாதம் 28-ம் தேதி பல இடங்களில் சோதனை நடத்தினர். இதில் மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்று 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செயற்பாட்டளர்கள் கைது: உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டுக்கு மத்திய அரசு எதிர்ப்பு!

5 செயற்பாட்டளர்களும் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர்

New Delhi:

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் உள்ளனர் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் புனே போலீசார் கடந்த மாதம் பல்வேறு சோதனையில் ஈடுபட்டனர். இதில் சமூக செயற்பாட்டாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க வலியுறுத்தி வரலாற்றாசிரியர் ரோமிளா தாப்பர் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனை விசாரித்த நீதிபதிகள் செயற்பாட்டாளர்களின் வீட்டுக் காவலை 19-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ‘எல்லா வழக்கும் உச்ச நீதிமன்றத்துக்கு வருவது சரியல்ல. அது தவறான நடைமுறையாகும்’ என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு பதிலளித்த நீதிபதிகள், ‘போலீஸ் அளித்துள்ள ஆவணங்களை நாங்கள் சரிபார்க்க வேண்டியுள்ளது. செயற்பாட்டாளர்களுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாவிட்டால் அவர்களை விடுவிக்க உத்தரவிடுவோம். தேவைப்படும்பட்சத்தில் வழக்கு விசாரணையில் தலையிடுவோம் என்றனர். இதற்கிடையே செயற்பாட்டாளர்களை விடுவிக்கக் கோரி பல்வேறு மனித உரிமை அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

செயற்பாட்டாளர்கள் கைது குறித்து அறிய வேண்டிய 10 தகவல்கள்

  1. செயற்பாட்டாளர்களை விடுவிக்க கோரும் வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிப்பதில் மத்திய அரசுக்கு உடன்பாடில்லை. “எல்லா வழக்கும் உச்ச நீதிமன்றத்திற்கு வரமுடியாது. அப்படி வருவது என்பது தவறான நடைமுறை. இந்த நிலை நீடித்தால் பின்னர் எல்லா வழக்கும் உச்ச நீதிமன்றத்திற்கு வந்து விடும்“ என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், டி.ஒய். சந்திராசூட் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.
  2. செயற்பாட்டாளர்கள் தொடர்பான வழக்கு மற்ற நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது. எனவே இந்த வழக்குகளை தனி நீதிமன்றம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
  3. வழக்கை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்தால் அது ஆபத்தாக அமையும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
  4. சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில்தான் ரோமிளா தாப்பரின் மனுவை ஏற்று விசாரணை நடத்தி வருவதாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியுள்ளார்.
  5. மகாராஷ்டிர போலீசார் கடந்த மாதம் 28-ம் தேதி பல்வேறு செயற்பாட்டாளர்கள் இல்லங்களில் சோதனை நடத்தினர். சில மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் தெலுங்கு கவிஞர் வரவர ராவ், செயற்பாட்டாளர்கள் வெர்னோன் கோன்சால்ஸ், அருண் ஃபெரேரா, வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், செயற்பாட்டாளர்கள கவுதம் நவலகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  6. கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி நடந்த “எல்கார் பரிஷத்” கூட்டத்தை தொடர்ந்து பீமா-கொரேகான் கிராமத்தில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்த தொடங்கினர்.
  7. செயற்பாட்டாளர்கள் தரப்பில் வாதாடிய அபிஷேக் மனு சிங்வி, எல்கார் பரிஷத் கூட்டத்தில் செயற்பாட்டாளர்கள் பங்கேற்கவில்லை என்றும், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர் என்றும் வாதாடினார்.
  8. பலராலும் அறியப்பட்ட இந்திய குடிமகன்களாக இருக்கும் செயற்பாட்டாளர்களை, முன்பின் தகவல் தெரிவிக்காமல் கைது செய்தது ஏன் என மகாராஷ்டிர போலீசாரை உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டது.
  9. செயற்பாட்டாளர்கள் கைது தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தார். கடந்த 6-ந்தேதி இதனை விசாரித்த நீதிமன்றம் அறிக்கையில் மிகப்பெரும் அளவில் அவதூறு இருப்பதாக சந்தேகம் தெரிவித்தது.
  10. வழக்கு தொடர்பாக புனே உதவி காவல் ஆணையர் ஊடகங்களுக்கு பேட்டியளித்திருந்தார். அதில், செயற்பாட்டாளர்களை விடுவிக்கக் கோரும் வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கக் கூடாதென கூறினார். அவருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

.