This Article is From May 31, 2018

இனி வாட்ஸ்-அப் மூலமும் பணப் பரிமாற்றம் செய்யலாம்..!

`WhatsApp Pay' என்னும் பெயரில் அதன் பயனர்களுக்கு பணப் பரிமாற்றம் செய்யும் வசதியை, வாட்ஸ்-அப் நிறுவனம் கொடுக்கப் போகிறது

இனி வாட்ஸ்-அப் மூலமும் பணப் பரிமாற்றம் செய்யலாம்..!

அடுத்த வாரமே இந்த புதிய பணப் பரிமாற்ற வசதியை வாட்ஸ்-அப் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.

ஹைலைட்ஸ்

  • பணப் பரிமாற்ற வசதியை சோதனை அடிப்படையில் முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டது
  • இந்தியாவில் 20 கோடி பேர் வாட்ஸ்-அப்-ஐ ஆக்டிவாக பயன்படுத்தி வருகின்றனர்
  • 4 வங்கிகளுடன் இணைந்து இந்த வசதியை கொடுக்கப் போகிறது வாட்ஸ்-அப்

ஆன்லைன் பணப் பரிமாற்ற சந்தை இந்தியாவில் விரிவடைந்து வரும் நிலையில், வாட்ஸ்-அப் நிறுவனமும் மின்னணு பரிமாற்றம் செய்யும் வசதியை `WhatsApp Pay' என்னும் பெயரில் அதன் பயனர்களுக்குக் கொடுக்கப் போகிறது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் கிளை நிறுவனமான வாட்ஸ்-அப் நிறுவனம், இந்தியர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்து வருகிறது. இந்தியாவில் 20 கோடி பேர் வாட்ஸ்-அப் செயலியை ஆக்டிவாக பயன்படுத்தி வருகின்றனர். ஆரம்ப காலத்தில் இருந்த வாட்ஸ்-அப் செயலிக்கும் இப்போது இருக்கும் வாட்ஸ்-அப் செயலிக்கும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இது அந்நிறுவனம் தொடர்ந்து கொடுத்து வந்த அப்டேட்கள் மூலமே சாத்தியமாகி இருக்கிறது. இந்நிலையில், வாட்ஸ்-அப் மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் வசதியை இந்தியாவில் அடுத்த வாரம் அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வந்துள்ளது. 

ஹெச்.டி.எப்.சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் எஸ்.பி.ஐ வங்கி ஆகியவற்றுடன் கூட்டு சேர்ந்து இந்த பணப் பரிமாற்றம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்த வாட்ஸ்- அப் முடிவு செய்திருந்தது. ஆனால், எஸ்.பி.ஐ நிறுவனத்தை இந்தப் புதிய அப்டேட்டில் சேர்ப்பதில் சில சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும், எஸ்.பி.ஐ நிறுவனம் இல்லாமலேயே இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்த வாட்ஸ்-அப் ஆயத்தமாக உள்ளதாக தெரிகிறது. இந்த புதிய அப்டேட் வசதி அடுத்த வாரமே வாட்ஸ்-அப் நிறுவனத்தால் கொடுக்கப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரம் தெரிவிக்கின்றது.

பல போட்டி நிறுவனங்கள், ஆன்லைன் பணப் பரிமாற்றத்தில் பெரும் சந்தையை பிடித்துள்ள நிலையில், இனிமேலும் காலம் தாமதிக்க வேண்டாம் என்று வாட்ஸ்-அப் நிறுவனம் கருதுவதாக தெரிகிறது. சீனாவில், `WeChat' செயலி மூலம் பலர் பணப் பரிமாற்றம் செய்து வருவதும் வாட்ஸ்-அப் நிறுவனத்தின் இந்த அவசரத்துக்குக் காரணமாக இருக்கலாம். கடந்த பிப்ரவரி மாதம் WhatsApp Pay ஒரு சிறிய அளவில் சோதனை அடிப்படையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், சீக்கிரமே இந்த வசதி பொது மக்கள் அனைவரின் பயன்பாட்டுக்கும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

.