“வியாபாரத்தை மூடுவதை தவிர வேறு வழியில்லை…”- அரசின் உதவியை எதிர்பார்க்கும் Vodafone Idea

அரசு, கட்டணத்தை செலுத்தக் கோரி உத்தரவிட்டதற்கு எதிராக ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளன. 

“வியாபாரத்தை மூடுவதை தவிர வேறு வழியில்லை…”- அரசின் உதவியை எதிர்பார்க்கும் Vodafone Idea

முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ, இந்திய தொலைதொடர்புத் துறையில் நுழைந்து பல அதிரடி தள்ளுபடிகளை அறிவித்தது...

மத்திய அரசிடம் கேட்ட உதவி கிடைக்கவில்லை என்றால், இந்தியாவில் தனது வியாபாரத்தை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று நிறுவனத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா கூறியுள்ளார். 

இந்துஸ்தான் டைம்ஸ் லீடர்ஷிப் சம்மிட் நிகழ்ச்சியில் பிர்லாவிடம், “ஒருவேளை, அரசு நீங்கள் கேட்கும் உதவியை செய்யவில்லை என்றால், அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?,” என்று கேட்கப்பட்டது. 

அதற்கு பிர்லா, “வோடாபோன் ஐடியா வியாபாரத்தை மூடிவிட்டுப் போக வேண்டியதுதான்,” என்று தடாலடியாக பதில் அளித்தார். வோடாபோன் ஐடியா நிறுவனம், அரசுக்கு 53,038 கோடி ரூபாய் நிதி பாக்கியை வைத்துள்ளது. அதற்குத்தான் அந்நிறுவனம் விலக்கு கோரி முறையிட்டுள்ளது. 

முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ, இந்திய தொலைதொடர்புத் துறையில் நுழைந்து பல அதிரடி தள்ளுபடிகளை அறிவித்தது. இதனால், பிர்லா தலைமையிலான ஐடியா செல்லுலார் நிறுவனம் மற்றும், பிரிட்டனைச் சேர்ந்த வோடாபோன் நிறுவனம் திக்குமுக்காடின. இருவரும் இணைந்து செயல்பட்டால்தான் எதிர்காலம் என்று சுதாரித்து, நிறுவனங்களை இணைத்தனர். 

இரு நிறுவனங்களும் இணைந்த பிறகும், வோடாபோன் ஐடியா நிறுவனத்துக்கு சுமார் 1.17 லட்சம் கோடி ரூபாய் கடன் ஏற்பட்டது. இந்திய தொலைதொடர்புத் துறை ஜாம்பவான்களான ஏர்டெல், வோடாபோன் ஐடியா மற்றும் பிறர், கடந்த 14 ஆண்டுகளாக செலுத்தாத உரிமக் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை செலுத்த உத்தரவிட்டது மத்திய அரசு. நிறுவனங்கள் செலுத்த வேண்டிய மொத்தக் கட்டணம், சுமார் 1.47 லட்சம் கோடி ரூபாய் ஆகும். 

அரசு, கட்டணத்தை செலுத்தக் கோரி உத்தரவிட்டதற்கு எதிராக ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளன. 

அதே நேரத்தில் பிர்லா, அரசு தரப்பு, தற்போது இருக்கும் நிலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிகறார். ஏனென்றால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபி, கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.5 சதவிகிதமாக குறைந்துள்ளது. அதைக் கணக்கில் கொண்டு அரசு, நிவாரணம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறது பிர்லா தரப்பு.

“மத்திய அரசுக்கு, டெலிகாம் துறை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தெரியும். மொத்த டிஜிட்டல் இந்தியா திட்டமும் இதைச் சார்ந்துதான் இயங்குகிறது. ஆகையால், கண்டிப்பாக மத்திய அரசு பல நிவாரணத் திட்டங்களை அறிவிக்கலாம்,” என்று நம்பிக்கை தெரவிக்கிறார் பிர்லா. 

Listen to the latest songs, only on JioSaavn.com