
வோடாஃபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் இணைவதற்கான இறுதி ஒப்புதலை தொலை தொடர்பு அமைச்சகம் வழங்கியதாக, பி.டி.ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இரு நிறுவனங்களும் இணைந்து 7,268.68 கோடி ரூபாயை தொலை தொடர்பு இயக்குநரகத்துக்கு செலுத்திய பின் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இனி, நிறுவனங்களுக்கான பதிவாளரிடம் இறுதிக் கட்ட நடைமுறைகளை முடிப்பதற்காக இரு நிறுவனங்களும், அனுகு உள்ளதாகவும் பி.டி.ஐ தெரிவித்துள்ளது. இந்த தகவலை அடுத்து மும்பை பங்குச் சந்தையில் ஐடியா செல்லுல்லாரின் பங்குகள் 4.57% உயர்ந்து 57.35 ரூபாயாக இருந்தது.
வோடாஃபோன் ஐடியா என்று அறியப்பட இருக்கும் இந்த இணைப்பு, இந்தியாவிலேயே பெரிய தொலை தொடர்பு நிறுவனமாக உருவாக இருக்கிறது. 438.8 மில்லியன் வாடிக்கையாளர்கள் இந்நிறுவனத்திடம் இருப்பார்கள். ஜியோ, ஏர்டெல் போன்ற பெரும் நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக இந்நிறுவனம் இருக்கும்.
2016-ல் ஜியோ அறிமுகமானதில் இருந்து, ஒவ்வொரு காலாண்டிலும் ஐடியாவின், லாபம் குறைந்து கொண்டே வந்தது.
வோடாஃபோனின் தலைமை இயக்க அதிகாரி பலேஷ் ஷர்மா தான் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்ற உள்ளார்.