ஐடியா - வோடஃபோன் நிறுவனங்கள் இணைய அரசு அனுமதி கிடைத்தது

மொத்தம் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையில், 39 பில்லியன் ரூபாய், வோடஃபோனுக்கு அலைவரிசை ஒதுக்கியதற்கான கட்டணம்

ஐடியா - வோடஃபோன் நிறுவனங்கள் இணைய அரசு அனுமதி கிடைத்தது

வோடஃபோன் நிறுவனம் தன்னை ஐடியா செல்லுலார் லிட்., நிறுவனத்துடன் இணைத்துக் கொள்ள அரசிடம் இருந்து அனுமதி கிடைத்ததாக அறிவித்துள்ளது. 16 மாதங்களுக்கு முன் இந்த ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கு இடையே ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மத்திய தொலை தொடர்பு துறை, மீதமிருக்கும் 72.5 பில்லியன் ரூபாயை அரசுக்கு செலுத்தும் பட்சத்தில் அனுமதி வழங்கப்படுவதாக ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இணைப்பு, இந்தியாவிலேயே மிகப் பெரிய தொலை தொடர்பு நிறுவனத்தை உருவாக்கும். தள்ளுபடிகளை வாரி இறைக்கும் முகேஷ் அம்பானியின் ஜியோவோடு, போட்டியாகவும் இருக்கும். 2016 செப்டம்பர் மாதம் ஜியோ தொடங்கப்பட்டதில் இருந்து, ஒவ்வொரு காலாண்டிலும் ஐடியாவின் வருவாய் குறைந்து வந்ததும், இந்த இணைப்புக்கு ஒரு காரணம்.

மொத்தம் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையில், 39 பில்லியன் ரூபாய், வோடஃபோனுக்கு அலைவரிசை ஒதுக்கியதற்கான கட்டணம். இந்த ஒதுக்கீடு ஏலம் மூலம் நடைபெற்றது. மீதம் உள்ள தொகை, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்காக ஐடியா நிறுவனம் செலுத்த வேண்டியது, என்கிறது தொலை தொடர்பு துறையின் ஆணை.

இந்த இணைப்பு இந்திய தொலை தொடர்பு துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முன்னணியில் இருக்கும் ஏர்டெல் நிறுவனம் பின்னுக்கு தள்ளப்பட்டு, 438.8 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் இந்த இணை மிகப் பெரும் நிறுவனமாக இருக்கும்.