கொரோனா நெருக்கடியால் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்த உபர் நிறுவனம்!

பாதிக்கப்பட்ட நிலைகள் நிறுவனத்தின் ஓட்டுநர் மற்றும் வாடிக்கையாளர் ஆதரவு நடவடிக்கைகள் மற்றும் பிற செயல்பாடுகளைச் சுற்றியே உள்ளன என்று பரமேஸ்வரன் கூறியுள்ளார்.

கொரோனா நெருக்கடியால் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்த உபர் நிறுவனம்!

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக கால்டாக்சி நிறுவனமான உபர் இந்தியா தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் மற்றும் மீட்டெடுப்பின் கணிக்க முடியாத தன்மை ஆகியவை காரணமாக உபர் இந்தியா அதன் பணியாளர்களின் அளவைக் குறைப்பதைத் தவிர வேறு வழியில்லை" என்று உபர் இந்தியா மற்றும் தெற்காசியா தலைவர் பிரதீப் பரமேஸ்வரன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சில விதிவிலக்குகளுடன் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நான்காவது கட்டத்தில் இருக்கும் நேரத்தில், பொருளாதாரம் ஸ்தம்பித்த நிலைக்கு சென்றதால், பல வணிகங்கள் தொழிலாளர்களை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில், உபர் இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட நிலைகள் நிறுவனத்தின் ஓட்டுநர் மற்றும் வாடிக்கையாளர் ஆதரவு நடவடிக்கைகள் மற்றும் பிற செயல்பாடுகளைச் சுற்றியே உள்ளன என்று பரமேஸ்வரன் கூறியுள்ளார்.

உபர் குடும்பத்தினரையும், நிறுவனத்தில் உள்ள எங்கள் அனைவரையும் விட்டு வெளியேறும் சகாக்களுக்கு இன்று நம்பமுடியாத சோகமான நாள், "என்று அவர் கூறினார்.

இந்த பணிநீக்கங்கள் முன்னர் அறிவிக்கப்பட்ட உலகளாவிய வேலை இழப்புகளின் ஒரு பகுதியாகும் என்று உபர் இந்தியா தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், உபெர் இந்தியாவின் தாய் நிறுவனமான, அமெரிக்காவை தளமாகக் கொண்ட உபேர் டெக்னாலஜிஸ் - கொரோனா வைரஸ் தொற்றுநோயையும் மீறி லாபம் ஈட்டும் முயற்சியில், அதன் 23 சதவீத ஊழியர்களை குறைப்பதாக அறிவித்தது.

இந்த மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட 3,700 பேர் பணிநீக்கம் உட்பட மொத்தம் 6,700 பேருக்கு வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்றும் தொடர்ந்து, கால்டாக்சி மற்றும் உணவு விநியோகம் உள்ளிட்ட அதன் முக்கிய வணிகங்களில் கவனம் செலுத்தும் என உபர் டெக்னாலஜிஸ் தெரிவித்துள்ளது. 

எனினும், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு 10 வார சம்பளம், அடுத்த 6 மாதங்களுக்கான மருத்துவ இன்சூரன்ஸ், வேறு வேலைகளில் பணியமர்த்த ஆதரவு, அவர்களின் மடிக்கணினிகளைத் தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவதுடன், உபெர் திறமை அடைவில் சேர வாய்ப்பும் அளிக்கப்படுகிறது, என பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.