ஈரான் மீதான பொருளாதார தடையால் இந்தியாவுக்கு சவுதி கூடுதல் கச்சா எண்ணெய் சப்ளை

ஈரான் மீது அமெரிக்கா விதித்திருக்கும் பொருளாதார தடை முழுவதும் அமலுக்கு வந்த பின்னர், இந்தியாவின் தேவையை நிறைவேற்ற சவுதி கூடுதல் எண்ணெய் சப்ளை செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் மீதான பொருளாதார தடையால் இந்தியாவுக்கு சவுதி கூடுதல் கச்சா எண்ணெய் சப்ளை

உலகின் மிகப்பெரும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளர் என்ற பெருமை சவுதி அரேபியாவுக்கு உண்டு. ஈரான் மீது பல்வேறு காரணங்களால் அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக மற்ற நாடுகள் ஈரானின் கச்சா எண்ணெயை தவிர்க்க வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டு வருகின்றன. இதே நிர்பந்தம் இந்தியா மீதும் சுமத்தப்படுகிறது.

ஈரான் மீதான பொருளாதாரத் தடை நவம்பர் மாதம் அமலுக்கு வருகிறது. தற்போது ஈரான் நாடு சீனாவுக்கு மிக அதிகளவில் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்து வருகிறது. சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.

பொருளாதாரத் தடை வந்து விட்டால் அமெரிக்காவின் நெருக்கடி காரணமாக ஈரான் எண்ணெயை இந்தியா தவிர்க்கும். இதனை ஈடுகட்டுவதற்காக 40 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை கூடுதலாக வழங்குவதற்கு சவுதி அரசு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதேபோன்று, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் மங்களூரு ரிஃபைனரி பெட்ரோ கெமிக்கல்ஸ் ஆகிய 4 நிறுவனங்களும் சவுதியிடம் தலா 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை கூடுதலாக கேட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சவுதி அரசு எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. சவுதி அரேபியாவிடம் இருந்து மட்டும் இந்திய மாதத்திற்கு 2.5 கோடி பேரல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது.
 (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)