தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் முக்கிய வட்டி விகிதத்தைக் குறைத்தது ஆர்பிஐ!

இந்திய ரிசர்வ் வங்கி, ரெப்போ ரேட் விகிதத்தை 25 பேசிஸ் புள்ளிகள் அல்லது 0.25 சதவிகிதம் குறைத்துள்ளது

தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் முக்கிய வட்டி விகிதத்தைக் குறைத்தது ஆர்பிஐ!

ரெப்போ ரேட்-ஐ அடிப்படையாக வைத்துதான், ஆர்பிஐ, மற்ற வங்கிகளுக்கு குறைந்த கால நிதிகளை ஒதுக்கும்

இந்திய ரிசர்வ் வங்கி, ரெப்போ ரேட் விகிதத்தை 25 பேசிஸ் புள்ளிகள் அல்லது 0.25 சதவிகிதம் குறைத்துள்ளது. இதனால், தற்போது ரெப்போ ரேட் விகிதம் 6 சதவிகிதமாக குறைந்துள்ளது. 

ரெப்போ ரேட்-ஐ அடிப்படையாக வைத்துதான், ஆர்பிஐ, மற்ற வங்கிகளுக்கு குறைந்த கால நிதிகளை ஒதுக்கும். பல பொருளாதார வல்லுநர்கள், 'ஆர்பிஐ, ரெப்போ ரேட் விகிதத்தைக் குறைக்க வேண்டும்' என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

2019-20 நிதி ஆண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி விகிதம், 7.2 சதவிகிதமாக இருக்கும் என்று ஆர்பிஐ கணித்துள்ளது. நிதி ஆண்டின் முதல் பாதியில் வளர்ச்சி விகிதம், 6.8 முதல் 7.1 வரை இருக்கும் என்றும் நிதி ஆண்டி இரண்டாவது பகுதியில் ஜிடிபி வளர்ச்சி விகிதம், 7.3 முதல் 7.4 வரை இருக்கும் என்றும் கணித்துள்ளது ஆர்பிஐ. 

இந்த ஆண்டு மட்டும் ரெப்பே ரேட் விகிதத்தில் செய்யப்படும் இரண்டாவது மாற்றம் இது. முன்னரும் விகிதம் குறைக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது மேலும் குறைக்கப்பட்டுள்ளது. இப்படி குறைப்பதன் மூலம், மற்ற வங்கிகள், கடன் வாங்குவோருக்குக் குறைந்த வட்டி விகிதத்தில் அதை அளிக்க முடியும். 

2019-20 நிதி ஆண்டிற்கான, ஆர்பிஐ மானிட்டரி பாலிசி கமிட்டியின் சந்திப்பு ஏப்ரல் 2 ஆம் தேதி ஆரம்பித்தது. அந்த சந்திப்பைத் தொடர்ந்து தான், ரெப்போ ரேட் விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபி வளர்ச்சியானது கடந்த அக்டோபர் - டிசம்பர் காலக்கட்டத்தில் 6.6 சதவிகிதமாக குறைந்தது. செப்டம்பர் 2017-க்குப் பிறகு இதுவே மிகவும் குறைந்த ஜிடிபி வளர்ச்சி விகிதமாகும். இதைத் தொடரந்துதான் தற்போது ரெப்போ ரேட் விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.