எரிக்ஸனுக்கு தர வேண்டியதை அசலும் வட்டியுமாக ரூ. 571 கோடியை அளித்தார் அனில் அம்பானி

அனில் அம்பானிக்கு எதிராக எரிக்ஸன் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் கடந்த மாதம் எரிக்ஸனுக்கு சாதகமான தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.

எரிக்ஸனுக்கு தர வேண்டியதை அசலும் வட்டியுமாக ரூ. 571 கோடியை அளித்தார் அனில் அம்பானி

4 வாரத்திற்குள் தொகையை செலுத்தாவிட்டால் சிறை செல்ல நேரிடும் என்று அனில் அம்பானிக்கு உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

ஹைலைட்ஸ்

  • எரிக்ஸன் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது
  • தொகையை வழங்காவிட்டால் 3 மாதம் சிறை தண்டனை : உச்ச நீதிமன்றம்
  • கெடு நாள் முடிவதற்கு முன்பாகவே அனில் அம்பானி தொகையை வழங்கியுள்ளார்.

ஸ்வீடன் நிறுவனமான எரிக்ஸனுக்கு அளிக்க வேண்டிய தொகையை அனில் அம்பானி அசலும் வட்டியுமாக ரூ. 571 கோடியை அனில் அம்பானி வழங்கியுள்ளார். அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனிடம் இருந்து இந்த தொகை பெறப்பட்டுள்ளதாக எரிக்ஸன் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். 

கடந்த 2014-ல் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும், ஸ்வீடனின் எரிக்ஸன் நிறுவனமும் இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த விவகாரத்தில், எரிக்ஸனுக்கு ரூ. 550 கோடியை ரிலையன்ஸ் தர வேண்டியிருந்தது. இந்த தொகை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டதை தொடர்ந்து எரிக்ஸன் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியது. 

இந்த விவகாரத்தில் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம் 4 வாரத்திற்குள் எரிக்ஸனுக்கு வழங்க வேண்டியதை வட்டியும் முதலுமாக அனில் அம்பானி வழங்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவர் 3 மாதம் சிறைக்கு செல்ல நேரிடும் என்றும் எச்சரிக்கை செய்தது.

இந்த நிலையில், எரிக்ஸனுக்கு வழங்க வேண்டிய தொகை ரூ. 550 கோடி மற்றும் வட்டித் தொகை ரூ. 21 கோடி சேர்த்து மொத்தம் ரூ. 571 கோடியாக ரிலையன்ஸ் நிறுவனம் அளித்துள்ளது. 

இந்தியாவின் மிகப்பெரும் தகவல் தொடர்பு நிறுவனமாக இருந்த ரிலையன்ஸ் நிறுவனம் தனது பிஸ்னஸை கடந்த 2017-ல் நிறுத்திக் கொண்டது.