விருப்ப ஓய்வு கோரும் 92 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள்!

இந்த இரண்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களும் மூலோபாய சொத்துகளாக இருப்பதால் அவற்றை அரசாங்கம் லாபகரமாக்கும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். 

விருப்ப ஓய்வு கோரும் 92 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள்!

4ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் செலுத்த வேண்டிய தொகையை அரசே ஏற்கும் என மத்திய அமைச்சகம் முடிவு

92 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஊழியர்கள் விருப்ப ஓய்வு கோரியுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த இரண்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களும் மூலோபாய சொத்துகளாக இருப்பதால் அவற்றை அரசாங்கம் லாபகரமாக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் நஷ்டத்தால் தள்ளாடுகின்றன. இதனால், சம்பளச்சுமையை குறைக்கும் வகையில் விஆர்எஸ் திட்டத்தையும் கடந்த மாதம் அரசு அறிவித்தது. 

இதை ஏற்பவர்களுக்கு ஆண்டுக்கு 35 நாள் சம்பளம் என பணியாற்றிய மொத்த ஆண்டுகளுக்கு கணக்கிட்டு கருணைத்தொகை வழங்கப்படும். ஓய்வு வயது வரை ஆண்டுக்கு 25 நாள் சம்பளம் வீதம் கணக்கிட்டு வழங்கப்படும். இதுபோல, எம்டிஎன்எல் நிறுவனமும் விஆர்எஸ் திட்டத்தை அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி அன்று 50 வயது பூர்த்தியடையும் ஊழியர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பல மாதங்களாக ஊதியத்தை தாமதமாக பெற்று வரும் இந்நிறுவன ஊழியர்கள் பணி உத்தரவாதம் இன்றி அச்சத்தில் இருந்து வந்த நிலையில், இந்த அறிவிப்பை கேட்டு போட்டி போட்டுக் கொண்டு விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிஎஸ்என்எல் ஊழியர்களின் ஓய்வு வயது தொடர்பாக மாநிலங்களவையில எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து, மத்திய இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே கூறியதாவது, பிஎஸ்என்எல் ஊழியர்களின் ஓய்வு வயதை 50ஆக குறைக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை. 

பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் வரையிலும், எம்டிஎன்எல் ஊழியர்களுக்கு ஆகஸ்ட் வரையிலும் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களின் நிதி நிலை மோசமாக உள்ளதே சம்பளம் தாமதத்துக்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

4ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு பிஎஸ்என்எல் செலுத்த வேண்டிய 14,115 கோடி மற்றும் எம்டிஎன்எல் செலுத்த வேண்டிய 6,295 கோடியை அரசே ஏற்கும். இந்த நிறுவனங்களை மீட்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது என்றார். 

தொடர்ந்து, விருப்ப ஓய்வு திட்டத்தில் ஓய்வு பெற பிஎஸ்என்எல் ஊழியர்கள் 79,000 பேர், எம்டிஎன்எல் ஊழியர்கள் 14,000 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். 
 

More News