கொரோனாவால் வருவாய் பாதிப்பு: 1,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஓலா நிறுவனம்!
கால்டாக்சி ஒருங்கிணைப்பு நிறுவனமான ஓலா, அதன் ஊழியர்கள் 1,400 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாவிஷ் அகர்வால் ஊழியர்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா வைரஸ் தொற்றால் ஓலா நிறுவனத்தின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், நோட்டீஸ் பீரியட்டை பொருட்படுத்தாமல் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மூன்று மாதம் நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை உள்ளடக்கிய குறைந்தபட்ச நிதி செலுத்துதலை நிறுவனம் வழங்கும்.
துரதிர்ஷ்டவசமாக, கொரோனா நெருக்கடி நம்மைச் சுற்றிலும் முன்னோடியில்லாத வகையில் பொருளாதார மற்றும் சமூக அழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகம் எந்த நேரத்திலும் கொரோனாவுக்கு முந்தைய காலத்திற்கு மாறப்போவதில்லை என்று அகர்வால் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஓலா நிறுவனத்தின் வருவாய் 95 சதவீதம் குறைந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை தடுக்கும் வகையில் நாடு தழுவிய ஊரடங்கின் நான்காவது கட்டத்தில் இருப்பதால், பெங்களூரை தலைமை இடமாக கொண்ட ஓலா கால்டாக்சி நிறுவனம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. ஊரடங்கு காரணமாக, பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்ததால், பல வணிகங்கள் தங்களது செயல்பாடுகளை ஒழுங்கமைக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மார்ச்.25ம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக ஓலா கேப்ஸ் போன்ற கால் டாக்சி தொழில்கள் பெரிதும் பாதிகப்பட்டது.
இதைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஓலா போன்ற கால் டாக்சி நிறுவங்களின் கீழ் மூன்று சக்கரம் மட்டும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுநர்கள் இயக்கலாம் என கர்நாடக அரசு புதிய விதிமுறைகளை அறிவித்ததை தொடர்ந்து, நீண்ட நாட்களுக்கு பின்னர் நேற்றைய தினம் முதல் கர்நாடகாவின் பெங்களூர், மைசூர், மங்களூர், ஹூபாலி, தார்வாத் உள்ளிட்ட பகுதிகளில் ஓலா நிறுவனம் மீண்டும் தனது சேவையை தொடர்ந்துள்ளது.
விதிமுறைகளின் படி, கால் டாக்சியில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், ஓட்டுநருக்கு பின் இருக்கையில் ஜன்னல் ஓரங்களில் 2 பயணிகள் மட்டும் அமர்ந்து பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.