நிசான் – தமிழக அரசுக்கு இடையேயான இழுபறி முடிவுக்கு வருகிறது

இருதரப்புகளுக்கிடையே வரையப்பட்ட தீர்மான முன்மொழிவின்படி, தரப்படாத பாக்கித்தொகையாக 2000 கோடியை நிசான் அமைப்பு பெற்றுக்கொள்ளும் என்று தெரிகிறது.

நிசான் – தமிழக அரசுக்கு இடையேயான இழுபறி முடிவுக்கு வருகிறது

தமிழக அரசு ஜப்பானின் நிசான் கார் நிறுவனத்துக்கு அளிக்க வேண்டிய இழப்பீடு தொடர்பான சிக்கல் ஒருவழியாக முடிவுக்கு வருகிறது. பல முறை நினைவூட்டியும் தமிழக அரசு தனக்குச் சேர வேண்டிய 729 மில்லியன் டாலர் தொகையை அளிக்காததால் நிசான் நிறுவனம் பன்னாட்டு நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இருதரப்புகளுக்கிடையே வரையப்பட்ட தீர்மான முன்மொழிவின்படி, தரப்படாத பாக்கித்தொகையாக 2000 கோடியை நிசான் அமைப்பு பெற்றுக்கொள்ளும் என்றும் சேதாரங்களுக்காகக் கோரிய தொகையை விட்டுக்கொடுக்கும் என்றும் தெரிகிறது.

அடுத்த ஆண்டு தேர்தலைச் சந்திக்கவுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு சாதகமானதாக இம்முடிவு பார்க்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளாக தொழில் தொடங்க சிறந்த இடமாக இந்தியாவை மாற்ற அவர் முயன்று வருகிறார்.

தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக தமிழக அரசுடன் 2008இல் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி அது தனக்கு அளிக்கவேண்டிய ஊக்கத்தொகைகளை அளிக்காமல் இழுத்தடிப்பதாகக் கூறி, அத்தொகையைப் பெற்றுத்தருமாறு மோடிக்கு 2016ஆம் ஆண்டு நிசான் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

ஊக்கத்தொகைக் கணக்கில் 2900 கோடியும் பிற இழப்பீடுகள், வரிகள் உள்ளிட்டவற்றின் கணக்கில் 2100 கோடியும் தமிழக அரசு தரவேண்டி இருப்பதாக தனது நோட்டீசில் நிசான் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதில் ஓரளவுக்கான தொகையைத் தமிழக அரசு அளித்துவிட்டதாகவும் இன்னும் 2000 கோடி ரூபாய் ஊக்கத்தொகை மீதம் இருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது எட்டப்பட்டுள்ள முடிவின்படி, தீர்மானம் கையெழுத்தானவுடன், தமிழக அரசால் உடனடியாக 300 கோடி வழங்கப்படும் என்றும் மீதத்தொகை 2019 இறுதிக்குள் பத்து தவணைகளில் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

இது நடந்தவுடன், தமிழக அரசை எதிர்த்து, பன்னாட்டு நடுவர் மன்றத்தில் தொடுத்த வழக்கை நிசான் நிறுவனம் திரும்பப்பெறும் என்று கூறப்படுகிறது. தமிழக அரசு அதிகாரிகளும் நிசான் இந்தியா நிர்வாகிகளும் சேர்ந்து இத்தீர்மானத்தை வரைந்துள்ளனர். இதையடுத்து தமிழக முதல்வரும் ஜப்பானிலுள்ள நிசானின் தலைமை நிர்வாகிகளும் இதற்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரு தரப்புக்கும் இடையேயான பேச்சுவார்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய தமிழகத் தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், “இதுகுறித்து விரைவில் இறுதி முடிவு எட்டப்படும். தற்போது இரு தரப்புக்கும் இடையே சுமூகமான சூழல் நிலவுகிறது” என்று அவர் தெரிவித்தார். எனினும் அவர் இம்முன்மொழிவைப்பற்றிய விவரம் எதையும் கூறவில்லை.

நிசான், பிரதமர் அலுவலகம் ஆகியவையும் வரையப்பட்டுள்ள தீர்மானம் குறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.

தெற்காசியாவின் டெட்ராய்ட் – சென்னை:

ஃபோர்டு, ஹ்யூண்டாய் மோட்டார் முதலிய பல வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் சென்னையைச் சுற்றி தங்கள் தொழிற்சாலையை அமைத்துள்ளதால் சென்னை தெற்காசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுகிறது.

2008இல் ஜப்பானின் நிசான் நிறுவனமும் ஃபிரான்சின் ரெனால்ட் நிறுவனமும் இணைந்து சென்னை ஒரகடத்தில் கார் தொழிற்சாலை தொடங்க தமிழக அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் சில சலுகைகள், ஊக்கத்தொகைகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து ஆண்டுக்கு 4,80,000 வாகனங்களைத் தயாரிக்கும் திட்டத்தோடு தங்களது தொழிற்சாலையை அமைக்க, கடந்த ஏழு வருடங்களில் 6100 கோடியை செலவிட்டுள்ள நிசான், ரெனால்ட் நிறுவனத்துக்கு 2015 வரை மேற்குறிப்பிட்ட சலுகைகள் வழங்கப்பெற வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்த வழக்கில் அளிக்கப்பட்ட நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பல்வேறு நிறுவனங்கள் சார்பில் இருபது வழக்குகள் இந்தியாவுக்கு எதிராகப் பன்னாட்டு நடுவர் மன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. உலகில் வேறெந்த நாட்டுக்கு எதிராகவும் இத்தனை வழக்குகள் தொடரப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வோடாபோன், கெய்ர்ன் எனர்ஜி, டாய்ச் டெலிகாம் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வரிச்சலுகைகளைக் காப்பாற்றிக்கொள்ள இதுபோன்ற வழக்குகளைத் தொடர்ந்துள்ளன.

ஏறத்தாழ ஐம்பது நாடுகளுடன் போடப்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்களை கடந்த ஆண்டு இந்தியா இரத்து செய்தது. இதனால் பன்னாட்டு நடுவர் மன்றங்களில் முறையிட்டுத் தீர்வு பெறுவது முதலீட்டாளர்களுக்கு கடினமாகியுள்ளது.

 

 
 
 
 
© Thomson Reuters 2018
More News