
கோவை: மேட்டுப்பாளையம் முதல் உதகமண்டலம் வரை செல்லக் கூடிய நீலகிரி மலை ரயிலுக்கு புதுப்பிக்கப் பட்ட வசதிகள் செய்யப்பட உள்ளதாக தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
பல திரைப்படங்களில் இந்த நீலகிரி மலை காட்சி படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஷாருக்கான் நடித்த 'தில் சே' திரைப்படத்தில் வரும் 'சைய்ய சைய்ய' பாடல் இந்த ரயிலில் தான் படமாக்கப் பட்டது. தமிழில் 'உயிரே' என அந்தப் படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு 'தைய்ய தைய்ய' என அந்தப் பாடல் மாற்றப் பட்டிருந்தது. முழு பாடலுக்கும் அந்த ரயில் மேல் நின்று நடனம் ஆடியிருப்பார் ஷாருக் கான். தவிர இந்த நீலகிரி மலை ரயில் பாதையை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெஸ்கோ) உலக பாரம்பரிய களமாக 1995-ல் அறிவித்தது.
தற்போது சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக, உதகமண்டலம் ரயில் நிலையத்தில், ‘கோச்சடேரியா’ திறக்கப்பட உள்ளது. கோச்சடேரியா என்பது சிற்றுண்டி உணவகம். தற்போது மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை மட்டுமே நீராவியில் இந்த ரயில் இயக்கப் படுகிறது. இனிமேல் இது உதகை வரை நீட்டிக்கப் பட உள்ளது.
தவிர, உதகமண்டலம், ஹில்க்ரூவ் நிறுத்தங்களில் உணவகங்கள் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நீலகிரி மலை ரயிலின் பாரம்பரியத்தை நினைவு கூறும் பொருட்களை விற்பதற்கான கடைகளையும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் உள்ள பொன்மலை பணிமையில், 25 வருடம் பழமையான நீலகிரி மலை இரயில்-87 என்ற பெட்டி சர்வதேச தரத்திற்கு புதுப்பிக்கப் பட்டு வருகிறது.
இருக்கைகள், எல்.இ.டி. விளக்குகள், ரேக்குகள் என மொத்தம் 1.8 லட்சம் செலவில் இந்த ரயில் புதுப்பிக்கப் பட்டு வருகிறது.
அதோடு பயணிகளின் வசதிக்கேற்ப, உதகமண்டலம், குன்னூர், மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களில் வை-ஃபை வசதியும் கொண்டுவரப் பட்டுள்ளது. மேலும், குன்னூர் முதல் ரன்னிமேடு வரையுள்ள எட்டு கிலோமீட்டர் தொலைவிற்கு ரவுண்ட் ட்ரிப் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இனி சுற்றுலா பயணிகளுக்கு இன்னும் கொண்டாட்டம் தான்!
(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)