
வெளிப்படையான வரி முறை திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
வரி விதிப்பில் வெளிப்படையான வரி முறை திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்க ‘ஒளிவுமறைவற்ற வரிவிதிப்பு - நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம்' என்ற திட்டம் இந்தியாவின் வரி முறையை சீர்திருத்துவதற்கும் எளிதாக்குவதற்குமான ஒரு முயற்சி என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நாட்டில் நேர்மையான வரி செலுத்துவோர் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பெரும் பங்கு வகிக்கின்றனர்... இன்று தொடங்கப்படும் இந்த புதிய வசதிகள் நேர்மையானவர்களை கவுரவிப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகின்றன" என்று மோடி கூறியுள்ளார்.
வெளிப்படையான கணக்கிடும் முறை வரும் செப்.25ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. அதேநேரத்தில் வரி செலுத்துவோர் மீதான அழுத்தங்களை குறைக்கும் சீர்திருத்தங்கள் ஆக.13ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, வருமான வரித் துறையால் காலவரையறை சேவைகளை உறுதி செய்வதன் மூலம் குடிமக்களை மேம்படுத்தும் வகையில் 'வரி செலுத்துவோர் சாசனம்' தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
வரி செலுத்துவோர் மதிக்கப்படுவர். வரி செலுத்தும் முறையில் நம்பகத்தன்மையை அதிகப்படுத்தும் தேவை உள்ளது. வரி கணக்குகளை சரிபார்ப்பவர் யார் என்பதை தெரிந்துகொள்ள முடியாத வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது வரி செலுத்தும் முறையில் முதல் நிலை சீர்திருத்தம் ஆகும்.
"உண்மையிலேயே இது இந்தியாவுக்கு எளிய மற்றும் வெளிப்படையான வரிவிதிப்பு ஆட்சியை வழங்குவதில் ஒரு முக்கியமான படியைக் குறிக்கும்" என்று நிர்மலா சீதாராமன் ட்விட்டர் பதிவில், கூறியுள்ளார்.
கடந்த ஆறு ஆண்டுகளில் அரசு பல்வேறு வரி சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
நேர்மையாக வரி செலுத்துவோரின் வாழ்க்கை மாறும் போது நாடு முன்னேறும். நாட்டு மக்களின் வாழ்க்கையிலிருந்து அரசின் தலையீட்டை குறைப்பதற்கான ஒரு பெரிய படியாகும்.