
கடன் இல்லாத நிறுவனமாக மாறியது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம்!
ரிலையன்ஸ் நிறுவனம் கடன் இல்லாத நிறுவனமாக மாறியதை தொடர்ந்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது, பொற்காலத்தில் உள்ளதாக தொழிலதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். 2021 மார்ச் 31-ஆம் தேதி என்னும் எங்களின் இலக்குக்கு முன்னதாகவே ரிலையன்ஸ் நிகர கடனில்லாமல் செய்வதன் மூலம் பங்குதாரர்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம் என்றும் முகேஷ் அம்பானி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக, எண்ணெய் முதல் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வரை கொண்டுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் உரிமைகள் வெளியீட்டில் இருந்து, ரூ.53,000 கோடிக்கும், அதன் டிஜிட்டல் சர்வீசஸ் பிரிவான ஜியோ பிளாட்ஃபார்ம்களில் இருந்து, ரூ.1.16 லட்சம் கோடி முதலீடுகளை திரட்டியுள்ளது. இணைய நிறுவனமான பேஸ்புக் உள்ளிட்ட உலகளாவிய நிறுவனங்கள் முதலீடுகள் மூலம் இலக்குக்கு முன்னதாகவே நிகர கடன் இல்லாததாக நிறுவனமாக மாற உதவியது.
58 நாட்களில் ரூ.1,68,818 கோடிக்கு மேல் முதலீடுகளை பெற்றதாகவும், அதன் டிஜிட்டல் சர்வீசஸ் பிரிவில் முதலீடுகளையும், உரிமைகள் வெளியீட்டின் மூலம் ரூ.53,124.20 கோடி ரூபாயையும் பெற்றுள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தனது சில டிஜிட்டல் யூனிட் ஜியோ பிளாட்ஃபார்ம்களில், உலகின் சில முதன்மையான நிதி முதலீட்டாளர்களிடமிருந்து பெற்றுள்ள பதிவு முதலீடுகள் மற்றும் ஒரு மெகா பங்கு விற்பனை ஆகியவை இணைந்து, ரிலையன்ஸ் குழுமத்தை மார்ச் 2021-க்கு முன்னதாகவே நிகர கடன் இல்லாததாக மாற உதவியுள்ளதாக அம்பானி தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக, ஜியோவுடன் கூட்டுசேர்வதில் உலகளாவிய நிதி முதலீட்டாளர் சமூகத்தின் தனித்துவமான ஆர்வத்தால் நாங்கள் பெருமையடைந்துள்ளோம். எங்கள் பங்குதாரர்கள் மற்றும் மற்ற பங்குதாரர்களின் எதிர்பார்ப்புகளை சமன்செய்வது மீண்டும் மீண்டும், ரிலையன்ஸில் மரபணுவில் பதிந்த ஒரு விஷயமாக உள்ளது.
இந்தியாவின் வளர்ச்சி மற்றும் வளம் ஆகியவற்றை உள்ளடக்கிய அனைத்துக்கும் எங்கள் பங்களிப்பை தொடர்ந்து அதிகரிப்போம் என்று அம்பானி தெரிவித்துள்ளார்.