ஜூலையில் மாருதி சுசுகியின் விற்பனை 2% உயர்வு... சுமார் 1 லட்சம் வாகனங்கள் விற்பனை!

இந்தாண்டு ஜூலையில் 17,258 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன

ஜூலையில் மாருதி சுசுகியின் விற்பனை 2% உயர்வு... சுமார் 1 லட்சம் வாகனங்கள் விற்பனை!

நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் (ஏப்ரல்-ஜூலை) மொத்தம் 1,66,165 வாகனங்கள் விற்பனை

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் உள்நாட்டு சந்தையில் கடந்த மாதம் பயணிகள் மற்றும் வணிக வாகனங்கள் உட்பட 1,00,000 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது சுமார் 1.82 சதவீதம் உயர்வு ஆகும். சந்தை நிலவரப்படி, பயணிகள் வாகன விற்பனை 1.34 சதவீதம் உயர்ந்து 97,768 வாகனங்ககள் விற்கப்பட்டுள்ளன. 

கொரோனாவால் மாருதி சுசுகியின் வருவாய் கடந்த 17 ஆண்டுகளைக் காட்டிலும் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வந்தன. இந்த நிலையில், தற்போது கடந்த மாதத்தில் மட்டும் வாகன விற்பனை அதிகரித்துள்ளது. 

சிறிய ரக வாகனத்தைப் பொறுத்தவரையில் ஆல்டோ மற்றும் எஸ்-பிரசடோ மாடல்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11,577 வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்தாண்டு ஜூலையில் 17,258 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கிட்டத்தட்ட 49.07 சதவீத விற்பனை அதிகமாகும். 

காம்பக்ட் பிரிவில்  வேகன் ஆர், ஸ்விஃப்ட் மற்றும் டிசைர் மாடல்கள் உள்ளிட்ட வாகனங்களின் விற்பனை 10.40 சதவீதம் சரிந்து 51,529 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. அதன் நடுத்தர அளவிலான சியாஸ் மாடலின் விற்பனையும் 45.64 சதவீதம் சரிந்து 1,303 யூனிட்களாக உள்ளன.

பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் வேன்களின் விற்பனை 10.75 சதவீதம் உயர்ந்து 27,678 வாகனங்கள் விற்பனையாகியுள்ளதாக தகவ்கள் தெரிவிக்கின்றன.

ஏற்றுமதியைப் பொறுத்தவரையில், கடந்தாண்டு ஜூலையை விட இந்தாண்டு ஜூலை மாதத்தில், மொத்த ஏற்றுமதி 27.01 சதவீதம் குறைந்து, 6,757 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளன. 

நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் (ஏப்ரல்-ஜூலை) மொத்தம் 1,66,165 வாகனங்கள் விற்பனையானதாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 64.51 சதவீதம் குறைவு ஆகும்.