
இஎம்ஐ செலுத்துவதற்கு 2 ஆண்டுகள் வரையில் கால அவகாசம் நீட்டிக்க முடியும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. பலர் வேலையில்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், வாழ்வாதாரம் மற்றும் பிற தேவைகளுக்காக வங்கியில் வாங்கிய கடனை திருப்ப செலுத்த முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.
இதனிடையே, ஆகஸ்ட் மாதம் வரை தடை செய்யப்பட்டிருந்த நிபந்தனைகள், மீண்டும் நீட்டிப்பு செய்யப்படுமா என்று மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். மேலும், வட்டி விகிதம் குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இஎம்ஐ செலுத்துவதற்கு 2 ஆண்டுகள் வரையில் காலஅவகாசம் நீட்டிப்பு செய்ய முடியும் என்று மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தெரிவித்துள்ளன. வட்டி வசூலிப்பது குறித்து நாளைய விசாரணையில் முடிவு செய்யப்படுகிறது.
ஏற்கனவே வாங்கிய கடன் வட்டிக்கு, மேலும் வட்டி வசூலிக்க வங்கிககள் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது 2 ஆண்டுகளுக்கு காலநீட்டிப்பு செய்ய முடியும் என்று மத்திய அரசு கூறியிருப்பது மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.