பெப்சி நிறுவனத்தில் இருந்து விடைபெறுகிறார் இந்திரா நூயி

இப்பதவி மாற்றம் மென்மையாக நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் 2019 தொடக்கம் வரை பெப்சியின் தலைவராக இந்திரா நூயி நீடித்து உதவுவார்

பெப்சி நிறுவனத்தில் இருந்து விடைபெறுகிறார் இந்திரா நூயி

இந்திரா நூயி கடந்த 12 ஆண்டுகளாக பெப்சியின் தலைமைச் செயல் அலுவலராக இருந்து வருகிறார்.

உலகின் முன்னணி குளிர்பானத் தயாரிப்பு நிறுவனமான பெப்சிகோவின் தலைமைச் செயல் அலுவலர் இந்திரா நூயி பதவியிலிருந்து விடைபெற உள்ளார். பெப்சி நிறுவனம் இதுகுறித்த அறிவிப்பை இன்று அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்திரா நூயி அக்டோபர் 3 அன்று பதவியிறங்குகிறார். இந்திரா நூயி கடந்த 24 ஆண்டுகளாக பெப்ஸி நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் ஆவார். 12 ஆண்டுகளாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலராக இருந்து வருகிறார். மேலும் இந்திரா நூயியை அடுத்து புதிய தலைமைச் செயல் அலுவலர் பொறுப்பை ஏற்க ராமன் லாகுவர்டாவை இயக்குநர் குழு ஒருமனதாகத் தேர்வுசெய்துள்ளது. “எனினும் இப்பதவி மாற்றம் மென்மையாக நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் 2019 தொடக்கம் வரை பெப்சியின் தலைவராக இந்திரா நூயி நீடித்து உதவுவார். அக்டோபர் மூன்றாம் தேதியில் இருந்து ராமன் லாகுவர்டா இயக்குநர் குழுவில் இணைவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பெப்சிகோவின் தலைமைப்பொறுப்பில் பணியாற்றியதை உண்மையிலேயே என் வாழ்வின் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன். கடந்த 12 ஆண்டுகளாக இந்நிறுவனத்தின், பங்குதாரர்களின் முன்னேற்றத்திற்காக நாங்கள் ஆற்றிய பணியை எண்ணிப் பெருமை கொள்கிறேன். இந்தியாவில் பிறந்த நான் இத்தகைய வியத்தகு நிறுவனத்தைத் தலைமை தாங்கி நடத்துவேன் என ஒருபோதும் கற்பனை செய்ததில்லை…. அடுத்து இப்பதவியில் தொடர ராமன் லாகுவர்டா மிகச் சரியான நபர். அவரது நீண்ட பணி அனுபவமும் அவர் பெற்ற வெற்றிகளும் அதனைப் பறைசாற்றும்” என்று இந்திரா நூயி கூறியுள்ளார்.

புதிய தலைமைச் செயல் அலுவலராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ராமன் லாகுவர்டா கூறுகையில், “என் மேல் நம்பிக்கை வைத்து என்னைத் தேர்ந்தெடுத்த இயக்குநர்களுக்கு நன்றி. இது மிகப்பெரும் கௌரவம். இந்திரா நூயி அளித்த ஆதரவுக்கு அவருக்கும் நன்றி. தனது துணிச்சலான முடிவுகளாலும் தன்னிகரற்ற தலைமைப்பண்பினாலும் இந்நிறுவனத்தை மாற்றியமைத்தவர் அவர். அவர் போன்ற வழிகாட்டி, நண்பர் கிடைத்தது எனது நற்பேறு ஆகும்” என்றார். பெப்சி நிறுவனத்தின் 53 ஆண்டுகால வரலாற்றில் ராமன் அதன் ஆறாவது தலைமைச் செயல் அலுவலர் ஆவார். இவர் கடந்த 22 ஆண்டுகளாகப் பெப்சி நிறுவனத்தின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்துள்ளார்.

நூயி வெளியேறினாலும் பெப்சியின் மூத்த தலைமைக்குழுவில் வேறு மாற்றங்கள் ஏதும் இருக்காது.

ஹைலைட்ஸ்

  • ராமன் லாகுவர்டா ஒருமனதாகக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • 12 ஆண்டுகள் பெப்சியின் CEO-ஆக இந்திரா நூயி பதவி வகித்துள்ளார்.
  • 2019 வரை அவர் தலைவராகத் தொடர்வார்.
More News