
குறிப்பாக சுற்றுலாத்துறை, ஓட்டல் மற்றும் விமானப் போக்குவரத்து துறைதான் மிகக் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.
இந்திய பொருளாதாரம் ஜூன் மாதத்திலிருந்து மீளத் தொடங்கி விட்டதாக ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக ஒட்டுமொத்த உலகமே பொருளாதார முடக்கத்திற்கு ஆளாகியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ், பின்னர் படிப்படியாக உலக நாடுகளுக்கு பரவத் தொடங்கியது.
வரிசையாக ஐரோப்பிய நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் மார்ச் மாத தொடக்கத்தில் இந்தியாவில் பரவியது. நிலைமை தீவிரம் அடைவதை உணர்ந்த மத்திய அரசு மார்ச் கடைசி வாரத்தில் கட்டுப்பாடுகளை விதித்து முழு பொது முடக்கத்தை ஏற்படுத்தியது.
கடந்த 100 நாட்களுக்கும் மேலாக பொது முடக்கம் நடைமுறையில் இருக்கும் நிலையில் இந்தியாவில் சுமார் 80 சதவீத தொழில்கள் முற்றிலும் முடங்கிப் போயின.
இந்த நிலையில் கடந்த மாதம் முதல் இந்திய பொருளாதாரம் மீளத் தொடங்கி விட்டதாக ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்திருக்கும் பேட்டியில் கூறியிருப்பதாவது-
இந்திய பொருளாதாரத்தை கொரோனா வைரஸ் மிகக் கடுமையாக பாதித்துள்ளது. ஏப்ரல் மாதம்தான் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாதம் ஆகும். மே மாத கடைசியில் நிலைமை சற்று மீளத் தொடங்கியது.
முழுமையான பொருளாதார மீட்சி ஜூனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொழில் துறையில் முன்னேறிய மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தொழிற்சாலைகள் முடக்கப்பட்டது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
குறிப்பாக சுற்றுலாத்துறை, ஓட்டல் மற்றும் விமானப் போக்குவரத்து துறைதான் மிகக் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. 2008 ல் உலகம் முழுவதும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது. இதை விட கொரோனா ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு மிக அதிகமாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.