யெஸ் வங்கி பங்கு விலை 85% வீழ்ச்சி; பணத்திற்கு உத்தரவாதம் அளித்த நிர்மலா சீதாராமன்!

Yes Bank Share: கடன்சுமையில் சிக்கலான நிலையில் இருக்கும் வங்கிகளைப் புதுப்பிக்க மத்திய வங்கி ஒரு திட்டத்தைக் கொண்டுள்ளது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். .

Yes Bank: வாடிக்கையாளர்கள் பணத்திற்கு உத்தரவாதம் அளித்த நிர்மலா சீதாராமன்!

ஹைலைட்ஸ்

  • வாடிக்கையாளர் பணத்திற்கு உத்தரவாதம் தந்த நிர்மலா சீதராமான்
  • யெஸ் வங்கி 85% பங்கு விலைகள் சரிவு
  • வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக இந்த நடவடிக்கை

யெஸ் வங்கியின் மோசமான நிதி நிலையைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசுடன் ஆலோசனை நடத்திய ரிசர்வ் வங்கி அந்த வங்கியின் நிர்வாகத்தை 30 நாட்களுக்கு எடுத்துக்கொள்வதாக நேற்றைய தினம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, வரும் ஏப்.3ம் தேதி வரை யெஸ் வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் ரூ.50,000க்கு மேல் பணம் எடுக்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்தது. 

இந்நிலையில், யெஸ் வங்கியில் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களுக்கு எந்த ஒரு இழப்பும் ஏற்படாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவாதம் அளித்துள்ளார். முன்னதாக, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறும்போது, இதுபோன்ற கடன்சுமையில் சிக்கலான நிலையில் இருக்கும் வங்கிகளைப் புதுப்பிக்க மத்திய வங்கி ஒரு திட்டத்தைக் கொண்டுள்ளது. அதன் மூலம் நாங்கள் விரைவான நடவடிக்கை எடுப்போம் என்று அவர் கூறியுள்ளார்.

யெஸ் வங்கி குறித்து எடுக்கப்பட்ட முடிவு தனிப்பட்ட நிறுவன மட்டத்தில் அல்லாமல் "பெரிய மட்டத்தில்" எடுக்கப்பட்டது, மேலும் இது நிதி அமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது என்றும் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன் கூறும்போது, யெஸ் வங்கியில் டெபாசிட் செய்துள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நான் உத்தரவாதம் வழங்குகிறேன். அவர்களது பணம் பத்திரமாக உள்ளது. நான் ரிசர்வ் வங்கியுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். வாடிக்கையாளர்கள், வங்கி மற்றும் பொருளாதாரத்தின் மீதான அக்கறையிலே ஆர்பிஐ அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. 

முன்னதாக யெஸ் வங்கியை மீட்கும் வகையில் அதன் பங்குகளை வாங்குமாறு பாரத ஸ்டேட் வங்கியை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாகவும், எஸ்பிஐயும் அதன் பங்குகளை வாங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளிவந்தன. இதனால், பங்குச்சந்தையில் யெஸ் வங்கி பங்கு மதிப்பு 22 சதவீதம் உயர்ந்து 35.60ஆனது. 

Newsbeep

மறுசீரமைப்பு அல்லது இணைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் வங்கி வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

இதில் பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பிரஷாந்த் குமார், யெஸ் வங்கியின் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று காலை பெரும் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தைத் துவங்கின. மும்பை பங்குச்சந்தையில் வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் ஆயிரத்து 1459.52  புள்ளிகள் சரிந்து, 37,011.09 ஆக வர்த்தகம் ஆனது. நிப்டியும் 441.60 புள்ளிகள் குறைந்து 10,827.40 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.