அகவிலைப்படி உயர்வினை நிறுத்தியது மத்திய அரசு!

தவனை தொகையாக மத்திய அரசு, ஓய்வூதியர்களுக்கும், மத்திய அரசு ஊழியர்களுக்கும் செலுத்தும் தொகையை வரவிருக்கின்ற இரு அரையாண்டுகளுக்கு அதாவது ஜூலை 1, 2020 மற்றும் ஜனவரி 1, 2021 ஆகிய காலக்கட்டங்களுக்கு செலுத்தப்படமாட்டாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அகவிலைப்படி உயர்வினை நிறுத்தியது மத்திய அரசு!

இந்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய அரசு அறிவித்திருந்த 4 சதவிகித அகவிலைப்படி உயர்வினை மத்திய அரசு நிறுத்தியுள்ளது.

சர்வதேச அளவில் கொரோனா தொற்றானது உயிரிழப்புகளை மட்டுமல்லாது கடும் பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. ஏற்கெனவே நாட்டின் பொருளாதாரம் மோசமான அளவில் பாதிக்கப்பட்டிருந்ததையடுத்து, கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பொருளாதாரம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. உலக வங்கி இந்தியாவின் இனி வரும் ஆண்டின் பொருளாதாரம் என்பது 3 சதவிகித அளவில்தான் இருக்கும் என கணித்திருந்தது.

இந்த நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வினை அறிவித்திருந்தது. மத்திய அமைச்சரான பிரகாஷ் ஜவடேகர் இந்த அறிவிப்பினை ஜனவரியில் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். 7 சதவிகிதத்திலிருந்து 11 சதவிகிதமாக அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் 4 சதவிகித அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று கூறியிருந்தார். இதனால் நாடு முழுவதும் கிட்டதட்ட 50 லட்சம் அரசு ஊழியர்களும், 61 லட்சம் ஓய்வூதியர்களும் பயனடைவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்கு 2021 ஜூலை வரை அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்படும் என்று மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. இக்காலகட்டங்களில் முன்னர் இருந்த பழைய தொகையே வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தவனை தொகையாக மத்திய அரசு, ஓய்வூதியர்களுக்கும், மத்திய அரசு ஊழியர்களுக்கும் செலுத்தும் தொகையை வரவிருக்கின்ற இரு அரையாண்டுகளுக்கு அதாவது ஜூலை 1, 2020 மற்றும் ஜனவரி 1, 2021 ஆகிய காலக்கட்டங்களுக்கு செலுத்தப்படமாட்டாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பணவீக்கத்தினை சமாளிக்க அரசு ஊழியர்களின் ஊதியத்தினை கணக்கீடு செய்து குறிப்பிட்ட அளவில் கூடுதல் தொகையை அரசு வழங்கும். இந்த நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பின் மூலம், 2021-2022 காலகட்டங்களில் மாநில அரசு சார்பில் 82,566 கோடி ரூபாயும், மத்திய அரசின் சார்பில் 37,530 கோடி ரூபாயும் நடப்பு நிதியாண்டுகளில் சேமிக்கப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஓய்வூதியத்தை குறைக்கப்போவதில்லை என்றும், தற்போது நடைமுறையில் இருக்கும் தொகையே வழங்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், அனைத்து ஓய்வூதியதாரர்களின் நலனுக்கும் நல்வாழ்விற்கும் அரசு உறுதி பூண்டுள்ளது என்றும் கூறியுள்ளது.