
தனது வாட்சாப் செயலியின் வழியாக, பல்வேறு வகையான வணிக நிறுவனங்கள், சேவைத் தளங்களை வாடிக்கையாளருடன் இணைக்கும் வாட்சப் பிசினஸ் என்னும் புதிய வசதியை அறிமுகம் செய்ய ஃபேஸ்புக் தயாராகிவிட்டது.
பல மாதங்களாக வாட்சப் பிசினஸ் என்னும் இக்கருவியை ஊபர், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முதலிய 90 நிறுவனங்களுடன் சோதனை செய்து வருவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
தொழில் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளருக்கு வாட்சப்பில் தகவல்களை அனுப்பவும், ஃபேஸ்புக் விளம்பரங்கள் மூலம் நிறுவனங்களுடன் வாடிக்கையாளர்கள் வாட்சப்பில் ஒரே க்ளிக்கில் உரையாடவும் இப்புதிய வசதி வழி செய்யும்.
ஆர்டர் செய்த பொருள் பற்றிய விவரங்கள், இரசீதுகள் போன்ற விளம்பரம் அற்ற தகவல்களை இதில் அனுப்பலாம். தங்களுக்கு வரும் கருத்துகள், வினாக்களுக்கு அவை அனுப்பப்பட்டதில் இருந்து 24மணி நேரம் வரை இலவசமாக பதில் அனுப்பலாம். தாமதமாக அளிக்கும் பதில்களுக்கு நிறுவனங்கள் சிறிய தொகையொன்றைக் கட்டணமாகச் செலுத்த நேரிடும்.
2014இல் 19 பில்லியன் டாலருக்கு வாட்சப்பை விலைக்கு வாங்கியதில் இருந்தே இதன் மூலம் சம்பாதிப்பதற்கான வழிகளை ஃபேஸ்புக் அலசி வருகிறது.
வாட்சப் பிசினஸ் வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசம். எனினும் தொழில் நிறுவனங்கள் சிலவற்றுக்குக் கட்டணம் செலுத்த வேண்டி வரும்.
செய்திகள் அனைத்தும் பாதுகாப்பாக இரு முனைகளிலும் மறையாக்கம் செய்யப்பெறும். வாட்சப் பயனர்கள் தாங்கள் விரும்பினால் எந்த வியாபாரக் கணக்கையும் (புரொபைல்) முடக்கிக் (block) கொள்ளலாம்.
இதனிடையே ஃபேஸ்புக்கின் பங்குகள் கடந்த வார முடிவுகளில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. தனிநபர் தகவல்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆனதை அடுத்து ஃபேஸ்புக்கின் பயனர் எண்ணிக்கை மெதுவாகவே உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சிக்கல்களை எதிர்கொள்ள அதிக முதலீடுகளைச் செய்யவேண்டி இருப்பதால் இலாபமும் குறையும் எனக் கணிக்கலாம்.