
பெரிய அளவிலான வேலையிழப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளது
தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 67 ஆயிரத்தினை கடந்துள்ள நிலையில், மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட முழு முடக்க நடவடிக்கை வரும் 17-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
தற்போது, முழு முடக்க நடவடிக்கையின் காரணமாக முடங்கியுள்ள தொழில்களை மறு தொடக்கம் செய்வதற்கு மத்திய அரசு 9-10 லட்சம் கோடி ரூபாய் நிதி தொகுப்பினை வழங்க வேண்டும் என்று இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கடிதம் எழுதியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள எங்கள் தொழில்களை நாங்கள் மேம்படுத்தாவிட்டால் பெரிய அளவிலான வேலையிழப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளது. இந்த வேலையிழப்புகள் என்பது பொது தளத்தில், நுகர்வினை பெருமளவு குறைக்க வழிவகுக்கும். இது உற்பத்தி குறைவு என்கிற எதிர் வினையை ஏற்படுத்தும். இவ்வாறான நடவடிக்கைகள் பணப்புழக்கத்தினை பெரிய அளவில் குறைத்துவிடும் என FICCI தலைவர் சங்கீதா ரெட்டி மத்திய நிதியமைச்சருக்குக் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிறுகுறு(MSME) மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வட்டி இல்லாத கடனை 12 மாதங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் FICCI கோரியுள்ளது. இவ்வாறு சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான பிரச்சனை குறித்து பல தளங்களிலிருந்து கோரிக்கைகள் மேலெழுந்துள்ளது. ஆனால், மத்திய அரசு இந்நிறுவனங்களுக்குக் குறிப்பிட்ட எந்தவொரு தொகுப்பையும் அல்லது திட்டத்தையும் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் மேற்குறிப்பிட்ட அளவிலான அரசின் வட்டியில்லா கடன் உதவி, சிறு குறு தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு கீழே பணிப்புரியக்கூடியவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கும், பிற செலவுகளுக்கும் இந்த நெருக்கடி காலகட்டத்தில் பயன்படுத்தும் என FICCI தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
அரசு வழங்கும் கடன்களுக்கு முன்னிபந்தனை விதிக்க வேண்டும். அதாவது சிறு குறு நிறுவனங்கள் தொடர்ந்து இயங்க வேண்டும் என்றும், பணியாளர்களை வேலை நீக்கம் செய்யக்கூடாது என்ற நிபந்தனைகள் பேரில் கடன் வழங்கப்பட வேண்டும் என FICCI குறிப்பிட்டுள்ளது.
வேலையிழப்பு குறித்து:
வேலையிழப்பினை பொறுத்தமட்டில் மேற்குறிப்பிட்டதைப்போல் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள எங்கள் தொழில்களை நாங்கள் மேம்படுத்தாவிட்டால் பெரிய அளவிலான வேலையிழப்பு ஏற்படும். இந்த வேலையிழப்புகள் என்பது பொது தளத்தில், நுகர்வினை பெருமளவு குறைக்க வழிவகுக்கும். இது உற்பத்தி குறைவு என்கிற எதிர் வினையை ஏற்படுத்தும். இவ்வாறான நடவடிக்கைகள் பணப்புழக்கத்தினை பெரிய அளவில் குறைத்துவிடும்.
பணப்புழக்கம் குறித்து:
பணப்புழக்கத்தினை பொறுத்த அளவில், பெரு நிறுவனங்களுக்கு நெருக்கடியான காலகட்டங்களில், நிறுவனத்தினை மறு தொடக்கம் செய்ய கடன் அளிப்பதன் மூலமாக, அதை சார்ந்து இருக்கக்கூடிய சிறு குறு நிறுவனங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது. இல்லையெனில் சிறு அளவிலான நிறுவனங்கள் இதிலிருந்து மீள முடியாது என FICCI கூறியுள்ளது.
உள்நாட்டு கட்டுமானம் குறித்து:
உள்நாட்டு கட்டுமானத்தை பொறுத்த அளவில், ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ள 1.7 லட்சம் கோடியை கொண்டு உள்கட்டமைப்பு செலவினங்களை துரிதப்படுத்த வேண்டும். பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா (கிராமப்புற சாலை திட்டம்) மற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் போன்றவற்றில் செலவினங்களை அரசு துரிதப்படுத்தும் போது, மக்கள் கைகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும். கட்டுமானத்துறையில் அரசு செலவினத்தை ஏற்படுத்தும் போது, கட்டுமான துறையை சார்ந்த 200க்கும் அதிகமான துறைகளை அது வளப்படுத்தும். இந்த நடவடிக்கை பொருளாதாரத்தில் நேர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தும் என சங்கீதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.