
கொரோனா பாதிப்பால் வேலையின்மை நாட்டில் அதிகரித்து வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக பொருளாதாரம் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனால் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆட்கள் மற்றும் ஊதியக்குறைப்பில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் 20 சதவீத பணியாளர்களை நீக்குவதாக பல்துறை நிறுவனமான We Works india அறிவித்துள்ளது.
முன்னதாக ஆன்லைன் உணவு ஆர்டர் நிறுவனங்களான ஜொமாட்டோ மற்றும் ஸ்விக்கி ஆகியவை பணியாளர்கள் குறைப்பில் ஈடுபட்டன. இதேபோன்று பணி முறைகளையும் இந்த நிறுவனங்கள் மாற்றி அமைத்துள்ளன.
சுமார் 130 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் ஆன்லைன் உணவு ஆர்டர் நிறுவனங்களுக்கு பெரு நகரங்களில் நல்ல வரவேற்பு காணப்பட்டது. வேலை வாய்ப்பு அதிகம் அளிக்கும் துறையாக ஆன்லைன் உணவு ஆர்டர் வளர்ந்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் அத்தனையையும் முடக்கி விட்டது.
ஆட்குறைப்பு குறித்து We Work India-ன் தலைமை செயல் அதிகாரி கரண் விர்வானி கூறுகையில், 'கொரோனா வைரஸ் பாதிப்பால் தவிர்க்க முடியாத முடிவுகளை எடுத்துள்ளோம். இந்தியாவில் எங்கள் நிறுவனம் இன்னும் சிறப்பாக செயல்படும். வர்த்தக யுக்திகள் மாற்றி அமைக்கப்படும். மிகுந்த லாபம் தரும் ஆண்டாக 2021 இருக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்' என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டு பேட்டியளித்த அப்போதைய தலைமை செயல் அதிகாரி ஜிது விர்வானி, 2020 லாபம் தரும் ஆண்டாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
அடுத்து வரும் நாட்களில் ஆட்குறைப்பு குறித்த தகவல்கள் அதிகம் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.