
ஜூன் மாதம் 7 ஆம் தேதி முதல் இந்த விலை உயர்வு இருந்து வருகிறது.
ஹைலைட்ஸ்
- 18வது நாளாக எரிபொருட்களின் விலை உயர்ந்துள்ளது
- டெல்லியில் பெட்ரோலைவிட டீசல் விலை அதிகமாக உள்ளது
- மற்ற நகரங்களில் பெட்ரோல்தான் விலை அதிகமாக உள்ளது
நாட்டில் தொடர்ந்து 17 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டு வந்த நிலையில், இன்று டீசல் விலை மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் டீசல் விலையானது தொடர்ந்து 18வது நாள் உயர்வைப் பெற்றுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் போடப்பட்டிருந்த முழு முடக்க நடவடிக்கையை அடுத்து, 12 வாரங்களுக்குப் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்தாமல் இருந்தன பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள். ஆனால் இந்தக் கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர், தொடர்ந்து எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டு வருகின்றன. இன்று காலை 6 மணி நிலவரப்படி தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் 79.88 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் 79.76 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் டெல்லியில் பெட்ரோலைவிட டீசல் விலை உயர்ந்ததாக மாறியுள்ளது.
அதே நேரத்தில் மற்ற முக்கிய நகரங்களான கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை உள்ளிட்டவைகளில் பெட்ரோல்தான் டீசலைவிட விலை அதிகமாக இருந்து வருகிறது.
கடந்த 18 நாட்கள் தொடர் விலையேற்றத்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் சுமார் 9.41 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் டீசல் சுமார் 9.58 ரூபாய் உயர்ந்துள்ளது.
நாட்டின் முக்கிய நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் (ஒரு லிட்டருக்கான விலை):
City | Petrol | Diesel |
---|---|---|
Delhi | 79.76 | 79.88 |
Kolkata | 81.45 | 75.06 |
Mumbai | 86.54 | 78.22 |
Chennai | 83.04 | 77.17 |
(Source: Indian Oil) |
சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் நிலவும் விலை நிலவரம் மற்றும் ஃபோரெக்ஸ் ரேட் பொறுத்தே இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் விதிக்கப்படும் வேட் (VAT) வரி பொறுத்து மாநிலத்துக்கு மாநிலம் பெட்ரோல், டீசல் விலைகள் மாறுபடும்.
மார்ச் மாதம் முதல் கச்சா எண்ணெய் விற்பனை மந்தமாக இருந்து வந்த நிலையில், கொரோனா தொற்றை மட்டுப்படுத்தப் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால், சர்வதேச அளவில் எரிபொருள் தேவை அதிகரித்து வருகிறது. செவ்வாய் கிழமை நிலவரப்படி ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 42 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏப்ரல் மாதம், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 15.98 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க லாக்டவுன் உத்தரவு அமல் செய்யப்பட்டபோது, 82 நாட்களுக்குப் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த நடைமுறை 18 நாட்களுக்கு முன்னர் விலக்கப்பட்டது. அப்போதிலிருந்துதான் இரண்டு எரிபொருட்களின் விலையும் தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு வருகின்றன. ஜூன் மாதம் 7 ஆம் தேதி முதல் இந்த விலை உயர்வு இருந்து வருகிறது.
இந்தியாவில் உள்ள பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டெட், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டெட மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிட்டெட் ஆகியவைதான் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை தினமும் மாற்றியமைத்து வருகின்றன.