கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கு பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கும் : ரிசர்வ் வங்கி கவலை!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 540 அதிகரித்து 5,734 ஆக உயர்ந்துள்ளது. 166 பேர் கொரோனாவின் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர். 

கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கு பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கும் : ரிசர்வ் வங்கி கவலை!!

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு, பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கும் என ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கடந்த மார்ச் 25-ம்தேதி முதற்கொண்டு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. வரும் 14-ம்தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஏப்ரல் 14-ம்தேதி ஊரடங்கை விலக்கிக் கொள்வது என்பது சாத்தியம் அல்ல என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 

நாளை மறுதினம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். இதன்பின்னர், ஊரடங்கு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

21 நாட்கள் ஊரடங்கால் இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கிப் போயுள்ளன. இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது-

சர்வதேச அளவில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வர்த்தகம் மற்றும் சுற்றுலா கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கை ஏற்படுத்தியுள்ளோம். இது நாட்டின் பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கும். பொருளாதார வளர்ச்சிப் பாதைக்கு இந்தியா திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த மாதிரியான மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. 

Newsbeep

உலகளவில் பொருளாதார வளர்ச்சியும் கொரோனாவால் பாதிப்பை சந்தித்துள்ளன. 2019 - 20 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.0 சதவீதமாக இருந்தது. 2021 மார்ச் 31-ம்தேதியுடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக இருக்கும். 

உலகளவில் பல்வேறு பொருட்களின் விலைகள் நிலையாக இல்லை. குறிப்பாக கச்சா எண்ணெய்யின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. சர்வதேச பொருளாதாரமும் ஆரோக்கியமாக காணப்படவில்லை.

இவ்வாறு  ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 540 அதிகரித்து 5,734 ஆக உயர்ந்துள்ளது. 166 பேர் கொரோனாவின் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.