‘சமூக வலைத்தளங்களில் வங்கிக்கு எதிராகப் பதிவிட்டால் நடவடிக்கை’ – ஊழியர்களை எச்சரிக்கும் SBI

கொரோனா வைரஸ் பரவுதல் காரணமாக ஸ்டேட் வங்கிகள் தற்காலிகமாக மூடப்படும் என தகவல்கள் வெளியானது. இதனை மறுத்த வங்கி நிர்வாகம், தனது பெரும்பாலான கிளைகள் செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

‘சமூக வலைத்தளங்களில் வங்கிக்கு எதிராகப் பதிவிட்டால் நடவடிக்கை’ – ஊழியர்களை எச்சரிக்கும் SBI

2 ஊழியர்கள் மற்றும் ஒரு மூத்த அதிகாரி மீது ஸ்டேட் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது

சமூக வலைத்தளங்களில் பாரத ஸ்டேட் வங்கி (SBI)க்கு எதிராகக் கருத்துக்களைப் பதிவிடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வங்கி நிர்வாகம் எச்சரிக்கை செய்துள்ளது. இதுதொடர்பாக ஸ்டேட் வங்கி அனைத்து மண்டல தலைமை பொதுமேலாளர்களுக்குச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்த அறிக்கையில், ‘நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், பணப் பரிவர்த்தனை போன்ற நடவடிக்கையில் ஸ்டேட் வங்கி ஈடுபட்டு வருகிறது. வங்கியின் கொள்கைகள், நிர்வாகத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறப்பட்டுள்ளது.

கொரோனா பரவி வரும் சூழலில், ஸ்டேட் வங்கி இயங்கி வருவது அதன் ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் அவர்களில் சிலர் வங்கிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஸ்டேட் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக மேற்கு வங்கத்தில் வங்கிக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதற்காக, 2 ஊழியர்கள் மற்றும் ஒரு மூத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை பல்வேறு ஸ்டேட் வங்கி ஊழியர்கள் விமர்சித்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் கூறும்போது, ‘இந்தியக் குடிமக்களாக இருக்கும் நாம் தற்போதைய சூழல்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் வரும் பதிவுகளைப் பரந்த கண்ணோட்டத்துடன் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி ஸ்டேட் வங்கி சுற்றறிக்கை அனுப்பியிருப்பது, அரசியலமைப்பு சட்டம் 19 வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் உள்ளது' என்று கூறியுள்ளார்.

இதேபோன்று, ஸ்டேட் வங்கியின் சுற்றறிக்கை ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் செயல் என்று அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் கண்டித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து ஸ்டேட் வங்கியின் கொல்கத்தா மண்டல தலைமை மேலாளர் ரஞ்சன் குமார் அளித்துள்ள பேட்டியில், ‘ கொரோனா அல்லது எந்தவொரு விவகாரமாக இருந்தாலும் சரி; ஒவ்வொருவருக்கும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை உண்டு. ஆனால் அந்த கருத்துக்கள் வங்கியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தக் கூடாது.

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களின் நலனுக்காக ஸ்டேட் வங்கி தனது சேவையை தொடர்ந்து அளித்து வருகிறது' என்றார்.

முன்னதாக கொரோனா வைரஸ் பரவுதல் காரணமாக ஸ்டேட் வங்கிகள் தற்காலிகமாக மூடப்படும் என தகவல்கள் வெளியானது. இதனை மறுத்த வங்கி நிர்வாகம், தனது பெரும்பாலான கிளைகள் செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.