2018க்கு பின்னர் முதன்முறையாக 10,000 புள்ளிகளுக்கு கீழே சென்ற நிஃப்டி!

உலகளவில் ஏற்பட்டுள்ள இந்த அச்ச உணர்வு காரணமாக, முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு பங்குகளில் முதலீடு செய்யத் தயக்கம் காட்டி வருகின்றனர்.

2018க்கு பின்னர் முதன்முறையாக 10,000 புள்ளிகளுக்கு கீழே சென்ற நிஃப்டி!

இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியுடன் தொடங்கியுள்ளன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 500 புள்ளிகள் சரிந்து இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு முதல் முறையாக 10,000 புள்ளிகளை விடக் குறைந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,821 புள்ளிகள் சரிந்து 33,876.13-ல் புள்ளிகளில் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது. நிஃப்டி 500 புள்ளிகள் சரிந்து 9,990 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், ஐரோப்பாவிலிருந்து வருவதற்குத் தற்காலிக பயணத் தடையை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்ததை அடுத்து, உலகளாவிய சந்தைகளில் விற்பனை சரிந்தது. இதைத்தொடர்ந்து உள்நாட்டுச் சந்தைகளும் சரிந்தன. 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் இந்த அறிவிப்பால், உலகெங்கிலும் உள்ள பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்தன - இங்கிலாந்து தவிர ஐரோப்பாவிலிருந்து வர அனைத்து பயணங்களுக்கும் இன்று தொடங்கி அடுத்த 30 நாட்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது. இது, வணிகங்களுக்கும், உலகப் பொருளாதாரத்திற்கும் அதிக இடையூறுகளை ஏற்படுத்தும் என்பதால் முதலீட்டாளர்களைத் திகைப்பில் ஆழ்த்தியது.

எனினும், இந்த தடை உத்தரவால் வர்த்தகம் பாதிக்கப்படாது என டிரம்ப் தெரிவித்துள்ளார். 

கடந்த சில வாரங்களாக வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகப் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வாளர்கள் ஏற்கனவே கண்டறிந்தனர்.

அதேபோல், கொரோனா வைரஸ் பாதிப்பு துவங்கியதிலிருந்தே சர்வதேச பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டு வருகின்றன. இதன் எதிரொலியாக, இந்தியப் பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து வருகிறது.