கொரோனா காலத்தில் கடனுக்கு வட்டிபோடும் உத்தரவு: மத்திய அரசை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்!

ஆர்பிஐ வெளியிட்ட அறிவிக்கையில், கடனை தள்ளி செலுத்தும் காலக்கட்டத்தில் வட்டி கணக்கிட்டு வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா காலத்தில் கடனுக்கு வட்டிபோடும் உத்தரவு: மத்திய அரசை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்!

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா, “இந்த விவகாரத்தில் அனைவரின் பிரச்னைகளுக்கும் ஒரேயொரு முடிவு தீர்வாகாது” என்றார். 

ஹைலைட்ஸ்

  • கொரோனா பரவலைத் தொடர்ந்து கடனை தள்ளிக் கட்டலாம் என்றது மத்திய அரசு
  • வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதியோடு இந்த காலக்கெடு முடிவடைகிறது
  • செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து மத்திய அரசு, வங்கிகளிடம் வாங்கிய கடன்களை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை கட்ட வேண்டாம் என்று கூறியது. அதே நேரத்தில் இந்திய ரிசர்வ் வங்கி, கடனை தள்ளிவைத்துக் கட்டலாம் என்றாலும், அதற்கான வட்டியை கணக்கிட்டு வசூலித்தாக வேண்டும் என்று தெரிவித்தது. இந்த நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றம், ‘கடனை தள்ளிக் கட்டலாம் என்று தெரிவித்துள்ள அரசு, அந்த காலக்கட்டத்தில் வட்டியானது கட்டப்பட வேண்டுமா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கிக்குப் பின்னால் மத்திய அரசு மறைந்து கொள்ளக் கூடாது என்றும் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் இது குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கறாராக கூறியுள்ளது. 

உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான நீதிமன்ற அமர்வு, “இந்தக் கடன் கட்டும் பிரச்னையானது, மொத்த நாட்டிற்கும் நீங்கள் முழு முடக்க உத்தரவு போட்டதால் ஏற்பட்டது. நீங்கள் இரண்டு விஷயங்களில் உங்கள் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்த வேண்டும்: ஒன்று, பேரிடர் மேலாண்மை சட்டம் பற்றி விளக்க வேண்டும். மற்றொன்று, கடன் மீது போடப்படும் வட்டி மீது மேலும் வட்டி போடப்படுமா என்பது குறித்து தெளிவாகக் கூற வேண்டும்” என்று கூறியுள்ளது. 

உச்ச நீதிமன்றத்தின் கறார் கேள்விகளுக்கு, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா, “இந்த விவகாரத்தில் அனைவரின் பிரச்னைகளுக்கும் ஒரேயொரு முடிவு தீர்வாகாது” என்றார். 

நீதிபதி எம்.ஆர்.ஷா குறுக்கிட்டு, “இது வியாபாரத்தைப் பற்றி யோசிக்கும் நேரம் மட்டுமல்ல” என்று கடுகடுத்தார். 

கடந்த மார்ச் 27 ஆம் தேதி, ஆர்பிஐ வெளியிட்ட அறிவிக்கையில், கடனை தள்ளி செலுத்தும் காலக்கட்டத்தில் வட்டி கணக்கிட்டு வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆணையை ரத்து செய்யச் சொல்லித்தான் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. வழக்கின் மனுவில், ‘இந்த ஆணையானது, அதிக கஷ்டங்களையும், பாதிப்புகளையும், இடையூறையும் ஏற்படுத்துகிறது. இதன் மூலம் அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் வாழ்வதற்கான உரிமை பறிக்கப்படுகிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் முன்னதாக ஆர்பிஐ தரப்பு, “கடனை தள்ளி செலுத்தும் காலக்கட்டத்தில் வட்டி வசூல் செய்வதை ரத்து செய்தால், அது நிதி சார்ந்த சிக்கலை ஏற்படுத்தி, வங்கிகளுக்கு பிரச்னையை விளைவிக்கும்” என்று வாதாடியது.