அதிரடி காட்டும் மத்திய அரசு… கூட்டு சேரும் அமேசான் - ஃப்ளிப்கார்ட்..!

வர்த்தக எதிரிகளான அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் வகுக்கும் வியூகம் செல்லுபடியாகுமா என்று தெரியவில்லை

அதிரடி காட்டும் மத்திய அரசு… கூட்டு சேரும் அமேசான் - ஃப்ளிப்கார்ட்..!

அரசு வெளியிட்ட அறிவிப்பு, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்றவைகளின் அபரிவிதமான வளர்ச்சிக்கு முடக்குப் போடும் வகையில் மத்திய அரசு சில விதிமுறைகளை அமல் செய்ய உள்ளது. இது தங்களது வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் என்று நினைக்கும் ‘வர்த்தக எதிரிகளான' ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் கூட்டு  சேர்ந்து, அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போவதாக தகவல் வந்துள்ளது. 

மத்திய அரசு, சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, ‘ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், தங்கள் தளத்தில் விற்பனைக்குக் கொண்டு வரும் அனைத்து நிறுவனப் பொருட்களையும் ஒரே மாதிரிதான் நடத்த வேண்டும்' என்று தெரிவித்தது. இதன் அர்த்தம், அதிரடி சலுகைகள், மற்றத் தளங்களைவிட மிகக் குறைவான விலையில் பொருட்களை விற்பது போன்றவை தடுக்கப்படும் என்பதே. 

இது இந்தியாவில் கோலோச்சும் அமேசான் மற்றும் வால்மார்ட் நிறுவனத்தின் ஃப்ளிப்கார்ட் போன்றவைகளின் வளர்ச்சியைக் கடுமையாக பாதிக்கும் எனப்படுகிறது. அரசு வெளியிட்ட அறிவிப்பு, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்நிலையில்தான், பிப்ரவரி 1 என்றிருக்கும் தேதியை தள்ளி வைப்பது குறித்தும் விதிமுறைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்தும் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது. 

இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் வரவுள்ள நிலையில், மத்திய அரசு, சிறிய வணிகர்களை கவரும் நோக்கில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வர்த்தக எதிரிகளான அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் வகுக்கும் வியூகம் செல்லுபடியாகுமா என்று தெரியவில்லை.