This Article is From Nov 20, 2019

ஏர்டெல், வோடாஃபோன்-ஐடியாவை தொடர்ந்து, ஜியோ கட்டணமும் உயர்வு!

அடுத்த சில வாரங்களில் ஜியோவின் மொபைல் கால் மற்றும் டேட்டா கட்டணத்தை உயர்த்துவோம் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

New Delhi:


அடுத்த சில வாரங்களில் ஜியோவின் மொபைல் கால் மற்றும் டேட்டா கட்டணத்தை உயர்த்துவோம் என ரிலையன்ஸ் ஜியோவின் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ஏர்டெல், வோடாஃபோன் - ஐடியா லிமிடெட் கட்டண உயர்வை அறிவித்த மறுதினம் அம்பானியின் இந்த அறிவிப்பானது, வெளியாகியுள்ளது. 

இதுதொடர்பாக ஜியோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த கட்டண மாற்றத்தால் மற்ற சலுகைகளில் எந்த பாதிப்பும் இருக்காது என்று ஜியோ குறிப்பிட்டுள்ளது. அதேசமயம், ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு ஜியோ இணங்கும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், மற்ற மொபைல் ஆபரேட்டர்களைப் போலவே, நாங்களும் அரசுடன் இணைந்து செயல்படுவோம். இந்திய வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில், தொழிற்துறையை வலுப்படுத்த ஒழுங்குமுறை ஆணைக்கு இணங்குவோம். டேட்டா பயன்பாட்டை குறைக்காதவாறு அடுத்த சில வாரங்களில் கட்டணங்களை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்போம் என ஜியோ வெளியிட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்டுள்ள கடுமையான நிதி அழுத்தத்தின் காரணமாக அடுத்த மாதம் முதல் மொபைல் கட்டணங்களை உயர்த்த உள்ளதாக வோடாஃபோன் - ஐடியா லிமிடெட் (VIL), பாரதி ஏர்டெல் அறிவித்துள்ளது. 

உயர்த்தப்பட்ட கட்டணங்கள் வரும் டிச.1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ள நிலையில், எவ்வளவு கட்டணம் உயர்த்த உள்ளது என்பது குறித்த எந்த தகவலையும் அந்நிறுவனங்கள் வெளியிடவில்லை. இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் சுமார் 74 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் கூட்டாக தெரிவித்துள்ளன.

.